குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Sunday, September 5, 2010

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்குர்ஆன் என்பதின் விளக்கம்:

அகில உலகத்தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூலமாக ஒவ்வொரு வேதங்கள் அருளப்பட்டன, ஆனால் அந்த சமுகத்தினர் அதை சரிவர பயன்படுத்தாமல் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் விட்டுவிட்டார்கள். மேலும் அது காலப் போக்கில் அழிந்தும் விட்டன. இறுதியாக, இறுதி நபியான கன்மனி நாயகம் ரஸூல் (ஸல்) அவர்கள் மூலம் முஸ்லிம் மட்டுமல்லாது அனைத்து மத மக்களுக்கும் ஏற்ற முறையில் ஒரு வேதத்தை இறக்கிய்ருளினான் அதுவே இறுதி வேதமான அல்குர்ஆன் ஆகும். இது இறுதி நாள்வரை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், எப்படி அருளப்பட்டதோ! அதன் உள்ளடக்கம் சிறிதும் மாற்றமில்லாமல் பாதுகாக்கப்படும் என இறைவன் தன் திருமறையிலேயே! வாக்களித்துள்ளான். இதை யாராலும் எந்த ஒரு கருத்தையும் உட்திணிக்கவும் முடியாது, அதுபோல அதிலிருந்து எந்த ஒரு வரியையும் அழிக்கவும் முடியாது, ஏனென்றால் குர்ஆன் பல்லாண்டு காலமாக பல நபர்களின் மனதில் பதிந்தும் கிடக்கின்றது.

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

எந்த ஒரு வேதத்திற்கும் கிடைக்காத தனிசிறப்பு, குர்ஆன் அனைத்து மக்களாலும் படித்து அதன் படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே அனைத்து மொழிகளிலும், மொழிப்பெயர்க்கப்பட்டு இருப்பதுவே! யாரும் மறுமை நாளில் இறைவனே உன் வேதம் என்னுடைய மொழியில் இல்லை என்று வாதிட முடியாதப்படி எல்லாம் வல்ல இறைவன் அதை அருளியுள்ளான். ஆகவே "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழிக்கொப்ப நாம் வாழ்கின்ற காலத்திலேயே அவற்றை படித்து ஆராய்ந்து பயன்ப் பெற வேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமறையை ஓதுவதின் சிறப்பு குறித்து திருமறையும், நபியவர்களின் பொன் மொழிகளும் அதிகமதிகம் வலியுறுத்திக் கூறுகின்றன. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்:

எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும் தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ, நாம் வழங்கியவற்றிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கொடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக என்றைக்கும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்தும் அவர்களுக்கு மிகுதப் படுத்துவான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும் நன்றியை ஏற்றுக் கொள்ளுபவனுமாவான். (35 : 29-30)

உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: தாமும் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் அதனைக் கற்றுக் கொடுப்பவர்தாம் உங்களில் சிறந்தவராவார்|என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனைக் (கற்றுக்) கொடுத் தான். அதன் மூலம் அவர் இரவு-பகலில் நின்று வணங்கினார். இன்னொருவருக்கு அல்லாஹ் பொருளாதா ரத்தை வழங்கினான். அதன் மூலம் அவர் இரவு-பகலில் நல்ல வழியில் செலவு செய்கிறார். இந்த இருவர் விஷயத்திலன்றி பொறாமை கொள்ளுதல் என்பது இல்லை| (புகாரி, முஸ்லிம்).

மேலும் அபூ உமாமா (ரலி) வர்கள் அறிவிக்கின்றார்கள்: குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக தன்னை ஓதக் கூடியவர்களுக்கு மறுமை நாளில் அது பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லி;ம்)

நபியவர்கள் கூறினார்கள்: குர்ஆனை திறமையாகக் கற்றுத்தேர்ந்தவர், நல்ல கண்ணியமிக்க எழுத்தர் (மலக்கு) களுடன் இருப்பார். எவர் குர்ஆனை திக்கித் திக்கி ஓதுகின்றாரோ, மேலும் அவருக்கு அது கடினமாகவும் இருக்கின்றதோ அவருக்கு இரட்டைக் கூலி உண்டு| (புகாரி, முஸ்லிம்).


ஒரு கூலி ஓதியதற்காக. மற்றொன்று சிரமத்துடன் அதை ஓதியதற்காக. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
எவர் குர்ஆனிலிருந்து ஒரே ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கின்றது. அந்த ஒரு நன்மை அதைப் போன்று பத்து நன்மைகளாக அதிகரிக்கப்படுகின்றது. அலிஃப்-லாம்-மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். ஆனால் அலிஃப் ஒரு எழுத்து. லாம் ஒரு எழுத்து. மீம் ஒரு எழுத்து|. (திர்மிதி)


திருக் குர்ஆன் ஓதுவதின் ஒழுங்கு முறைகள்:

அல்லாஹ்வுக்காக ஓதுகிறோம் என்ற தூய எண்ணத்துடன் ஓத வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: உங்க ளது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனை அழையுங்கள். (40 : 14)

கவனத்துடனும் மனஓர்மையுடனும் ஓத வேண்டும். ஏனெனில் குர்ஆன் அல்லாஹ்வின் வாக்காகும். சுத்தமான நிலையில் அதனை ஓத வேண்டும். இது அல்லாஹ்வின் வேதத்திற்கு நாம் அளிக்கும் கண்ணியமாகும். எனவே பெருந்துடக்கு போன்றவற்றிலிருந்து சுத்தமான நிலையில்தான் அதனை ஓதவேண்டும். அறுவறுப்பான இடங்களில் குர்ஆனை ஓதலாகாது. ஏனெனில் இது போன்ற இடங்களில் திருமறையை ஓதுவது கண்ணியக் குறைவானதாகும். மேலும் மல-ஜலம் கழிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களிலும் குர்ஆனை ஓதுதல் கூடாது. கண்ணியமிக்க குர்ஆனுக்கு இத்தகைய இடங்கள் ஒருபோதும் உகந்தவையல்ல.

திருக்குர்ஆனை ஓதுவதற்கு முன்பாக சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறியுள்ளான்:

நீர் குர்ஆனை ஓதத் தொடங்குவீராயின் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!. (16 : 98)

குர்ஆனை அழகான முறையில் ராகமிட்டு ஓத வேண்டும். ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் மஃரிப் தொழுகையில் அத்தூர் அத்தியாயத்தை ஓதிடக் கேட்டேன். நபியவர்களை விட அழகிய குரலுடைய ஒருவரை அல்லது அழகாக ஓதுபவரை நான் கேட்டதில்லை|. (புகாரி, முஸ்லிம்)


தொழுபவர், தூங்குபவர் போன்றோருக்குத் தொல்லை தரும் வண்ணம் குரலுயர்த்தி ஓதலாகாது.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். அங்கே மக்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுபவர் தன் இறைவனுடன் மெதுவாக உரையாடுகிறார். எனவே எதைக்கொண்டு அவனுடன் உரையாடுகிறார் என்பதைக் கவனித்துக் கொள்ளட்டும். மேலும் உங்களில் ஒருவர் மற்றவருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் முறையில் குர்ஆனை சப்தமிட்டு ஓத வேண்டாம்|

குர்ஆனை ஓதும்போது நிறுத்தி, நிதானமாக ஓத வேண்டும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
மேலும் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (73 : 3).

அத்தோடு திருக்குர்ஆனை ஓதுபவர் ஸஜ்தா வசனத்தைக் கடந்து சென்றால் ஸுஜூது செய்தல் வேண்டும்.

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்கு திருப்தியளிக்கின்ற வகையில் ஓதுகின்ற பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்கி குர்ஆனை ஓதுவதன் மூலம் எங்களின் நன்மைகளை அதிகரித்து அந்தஸ்தை உயர்த்துவாயாக!

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்:

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும் குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ

6) "எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

விளக்கம்: குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும் அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள் அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நம்மை நோக்கி சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளைக்கு எத்தனை எழுத்துக்கள் படிக்க நமக்கு வாய்ப்பிருக்கிறது. அதன் நன்மைகளை நம்மால் கணக்கிட முடியுமா? சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைப்படும் : திலாவா ஹக்மிய்யா, திலாவா லஃப்ளிய்யா.

திலாவா ஹக்மிய்யா என்றால், குர்ஆனின் செய்திகள் உண்மையென ஏற்பதும் அதன் சட்டங்களை அமுல்படுத்துவதுமாகும். அதன் ஏவல்களைச் செய்வதன் மூலமும், அதன் விலக்கல்களை விட்டு விலகுவதன் மூலமும் அதனைப் பின்பற்றுதலைக் குறிக்கும்.

திலாவா லஃப்ளிய்யா என்றால், கிராஅதுல் குர்ஆன் என்கிற ஓதுதலாகும். இதன் சிறப்பு குறித்து, ஏராளமாக குர்ஆனின் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. குர்ஆன் முழுவதையும் ஓதுவதன் சிறப்பு குறித்தும், குறிப்பிட்ட அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு குறித்தும் அவை பேசுகின்றன.

எந்த ஒரு குழுவினர் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் ஒன்று கூடி குர்ஆனை ஓதுகிறார்களோ மேலும் தங்களுக்கிடையே அதனை ஆய்வு செய்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயம் அமைதி இறங்குகிறது. அவர்களைக் கருணை சூழ்கிறது. மேலும் அவர்களை மலக்குகள் வளைந்து கொள்கிறார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடம் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கின்றான்.

உங்களில் எவரும் இந்த ஆயத் - வசனத்தை நான் மறந்து விட்டேன் என்று சொல்ல வேண்டாம். உண்மையில் அவர் தான் மறக்கடிக்கப்பட்டார்

நான் மறந்து விட்டேன் என்பதன் காரணம், குர்ஆனில் அவர் மனனம் செய்திருந்தவை குறித்து அவர் பொடுபோக்காக இருந்து விட்டார். அதை மறந்து விடும் அளவுக்கு அவர் அலட்சியத்துடன் இருந்திருக்கின்றார் என்பதையும் காட்டுகின்றது. அதாவது குர்ஆனுக்கும் அவருக்கும் தொடர்பின்மையைக் காட்டுகின்றது.

நிச்சயமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் விருந்துபச்சாரமாகும். அவனது விருந்துபச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு, தெளிவான ஒளி, பயனுள்ள நிவாவரணியாகும். இந்தக் குர்ஆனை யார் பற்றிப் பிடித்து நிற்கிறாரோ அவருக்குப் பாதுகாப்பாகவும், அதைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு ஈடேற்றமாகவும் திகழ்கிறது. அதை ஓதுவதன் மூலம் ஒன்றுக்கு பத்து நன்மை என இறைவன் கூலி வழங்குவான். அல்லாஹ்விடம் கூலியையும் அவனது உவப்பையும் எதிர்பார்த்து யார் ஓதினாலும் அவர்களின் கூலி குறையாது. குறைவான அமல்களுக்கு ஏராளமான கூலிகள். நிவர்த்தி செய்ய முடியாத அந்த மறுமை நாளில் லாபம் ஈட்டத் தவறியவன் யாரோ அவன் தான் நஷ்டம் அடைந்தவன்.

பகல்-இரவு எல்லா நேரங்களிலும் எந்த அமல்கள் இறைவனோடு உங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அமல்களைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுங்கள். ஆயுட்காலம் வேகமாகச் சுருட்டப்படுகின்றது. காலங்கள் அனைத்தும் எவ்வாறு கழிந்து செல்கிறதெனில் பகலின் சில மணி நேரங்கள் கழிந்தது போன்றே தோன்றுகின்றது.

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஓதுகின்ற பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! அதன் மூலம் எங்களை ஈடேற்றப் பாதையில் செலுத்துவாயாக! இருள்களிலிருந்து எங்களை வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்குவாயாக! அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனே!

யா அல்லாஹ்! இந்தக் குர்ஆன் மூலம் எங்களது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் இதன் மூலம் எங்களை விட்டும் தீமைகளைப் போக்குவாயாக! உனது கருணையினால் எங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும், கருணையாளர்களில் எல்லாம் கருணையாளனே! பாவமன்னிப்பும் வழங்குவாயாக!

யா அல்லாஹ்! எங்களுடைய நோன்புகளைப் பாதுகாப்பாயாக! எங்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடியதாக அவற்றை ஆக்கியருள்வாயாக! மேலும் எங்கள் பாவங்களையும், எங்கள் பெற்றோர் பாவங்களையும் அனைத்து முஸ்லிம்களின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக! ஆமீன்!!
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email:

0 comments:

Post a Comment

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்