குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Sunday, November 21, 2010

பிரார்த்தனை



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நம் அனை
வருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

நாம் வாழும் இவ்வுலகில் போட்டி, பொறாமை, நல்லென்னம் இல்லாமை போன்ற காரணங்களால் மனிதன் பல வழிகளில் சபிப்பிற்கு உள்ளாகி வாழ்க்கையை துறந்து விடுகிறான். பிறகு அவனால் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்யமுடியவில்லை. வாழ்க்கை என்னவோ இருண்டு விட்டதாக என்னி முடங்கி விடுகிறான். ஆனால் இதிலிருந்து மீள வழித் தெரியாமல் இருக்கிறான். பிரார்த்தனை (துஆ) செய்தால் நம் வாழ்க்கையை திரும்ப பெற்றுவிடலாம் எனப்தை இக்கட்டுரையின் மூலம் தெரிந்
துக்கொள்ளலாம்.
எல்லாம் வல்ல இறைவன் யாருடைய பிரார்த்தனையையும் நிராகரிப்பது இல்லை. யார் இறைவனிடத்தில் இரு கைகளையும் ஏந்தி பிரார்த்தனை செய்கிறார்களோ! அவர்களை வெரும் கை
களாக திருப்பி அனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என் அருள்மறையில் கூறுகிறான். இறைவன் படைத்த எந்த ஒரு ஆன்மாவும் இறைவனிடத்தில் வேண்டினால் அதன் வேண்டுதலுக்கு ஏற்றார்ப்போல் நற்கூலியை தருவதாக இறைவன் கூறுகிறான். மேலும் எந்த ஒரு வேண்டுதலும் முழு ஈடுபாட்டுடன் இருக்கவேண்டும். இறைவனிடத்தில் எந்த முறையில் வேண்டுதல் வேண்டும் என்ற சில வரைமுறைகள் இருக்கின்றன, அதன் அடிப்படையில் வேண்டினால் அவர்களுடைய துஆவை இறைவன் ஒரு போதும் மறுப்பதில்லை. மேலும் அடியார் அழைக்கும் அழைப்புக்கு வெகு விரைவில் பதில் தர ஏதுவாக நம் பிடரி நரம்பைவிட மிக அருகாமையில் இருப்பதாகக் கூறுகிறான். அல்குர்ஆனில் இறைவன் பிரார்த்தனையைப்பற்றி 44 அத்தியாயத்தில் 49 தடவை விளக்கியுள்ளான்.

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (50:16)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (2:186)

நாம் கேட்கும் பிரார்த்தனை இறைவனிடத்தில் கண்டிப்பாக ஏற்கப்படும். நாம் ஒன்றுக்காக பிரார்த்தனை செய்துக்கொண்டு இருப்போம் ஆனால் அது நம்க்கு நிறைவேறி இருக்காது நாம் நம்முடைய துஆவை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்று தவறுதலாக புரிந்துக் கொண்டிருப்போம் ஆனால் இறைவனோ! நம்முடைய பிராத்தனைக்கு பகரமாக, நம்க்கு வரக்கூடிய துன்பதிலிருந்து நம்மை காப்பாற்றிருப்பான். ஆக மொத்தத்தில் நம்முடையப் பிரார்த்தனை ஏதோ ஒரு வகையில் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது காலத்தால் அறிந்த உண்மை.

மேலும் வல்ல ரஹ்மான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது தாங்கக்கூடிய அளவுக்குதான் கஷ்டங்களைக்கொடுகிறான், மனிதன் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இறைவனை துதிக்கவேண்டும், இறைவனிடத்தில் மன்றாடி துஆ செய்யவேண்டும் என்பதற்காகவே படைத்த இறைவனே, எவ்வாறு ஒவ்வொரு மனிதனும் பிரார்த்தனை (துஆ) செய்யவேண்டும் என்று அருள்மறையாம் குர்ஆனிலேயே அழகாக சொல்லித் தருகிறான்.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286). மேலும்,

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (3:8)

இதன் மூலம் இறைவன் எந்த ஒரு ஆத்மாவுக்கும் அதிகப்படியான துன்பங்களையோ, கஷ்டங்களையோ கொடுப்பது இல்லை என்பது நன்றாக விளங்குகிறது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது 'அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்' (அடியார்களுக்கு முன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ற கூறிவந்தோம். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, 'நிச்சயமாக அல்லாஹ்வே 'ஸலாம்' (சாந்தியளிப்பவன்) ஆக இருக்கிறான். எனவே, உங்களில் ஒருவர் தொழுகையின் இருப்பில் இருக்கும்போது 'அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன' (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறினார்கள் என அமையும். 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகிறேன்) என்றும் கூறட்டும். பிறகு, தாம் நாடிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ளலாம்' என்றார்கள். (புகாரி: 79:6230) இதன் மூலம் யார்வேண்டுமானாலும் யாருக்காகவும் பிரார்த்தனை (துஆ) செய்யலாம்.

பிரார்ததனை இறைவனிடத்தில்:

எந்த ஒரு ஆத்மாவும் இறைவனிடத்தில் மட்டும் தான் தன்னுடைய பிரார்த்தனையை வைக்கவேண்டும், உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவியும் தேடுகிறோம் என்ற குர்ஆன் வசனத்திற்கு ஒப்ப ஒவ்வொரு ஆத்மாவும் செயல்படவேண்டும். நம்மைப்படைத்த இறைவனிடத்தில் எதற்காக வேண்டுமானலும் பிரார்த்தனை செய்யலாம். உதாரணத்திற்கு இறைவனிடத்தில் இப்லீஸ் தன்னை உலகம் அழியும் நாள் வரை விட்டு வைக்குமாறு வேண்டினான், அதைக்கூட இறைவன் மறுக்காமல் அவனுடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்டான். அப்படிப்பட்ட இறைவன் நம் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளமாட்டானா! என்ன?

மன ஓர்மையுடன் பிரார்த்தனை:

நாம் செய்யக்கூடிய பிரார்த்தனை எளிதில் இறைவனால் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும் என்றால் அவனிடத்தில் மன ஓர்மையுடனும், தூய்மையுடனும், அழகியமுறையிலும் அவனிடத்தில் கேட்க வேண்டும். அப்படிக் கேட்கக் கூடிய துஆ இறைவனிடத்தில் உடனே அங்கிகரிக்கப்பட்டு எதற்காக அவன் பிரார்த்தனை செய்தானோ அது நிறைவேற்றப்படுகின்றது. மேலும் இறைவனிடத்தில் எந்த நேரத்திலும் பிரார்த்தனையை மேற்கொள்ளலாம் இதையே இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (13:14)

(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது. (18:28)

ஆகவே இறைவனிடத்தில் நாம் எவ்வாறு பிரார்த்தனை (துஆ) செய்ய வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும். மேலும் யாருடைய பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை. இறுதியாக ஒரு குர்ஆன் ஆயத்தை எடுத்துக்கூறி என் சிறிய படைப்பை முடிக்கிறேன். அல்லாஹ் எல்லாருடைய பிரார்த்தனையையும் ஏற்று (கபுல்) கொள்வானாக என்று பிரார்த்தனை செய்தவனாக............!

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள். (66:8)
Saturday, November 13, 2010

குர்ஆன் இறைவேதமா?



மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)

உலகில் பல மதங்களும், பலவகையான வேதங்களும் இருக்கின்றன, ஆனால் எந்த ஒரு வேதமும் காலப் போக்கில் மாற்றங்களை சந்தித்திருக்கின்றன. ஆனால் அருள்மறையாம் திருகுர்ஆன் இறைவனால் இறக்கிய நாளில் இருந்து இன்று வரை துளி அளவு கூட மாற்றமில்லாமல், எப்படி அது அருளப்பெற்றதோ! அப்படியே இன்று வரை மட்டுமல்லாது இறுதி நாள் (கியாமத் நாள்) வரை அவை எந்த ஒரு மாறுதலுக்கும் உள்ளாகாமல் அப்படியே இருக்கும் என்பதில் துளி அளவு கூட சந்தேகமில்லை. ஏனென்றால் குர்ஆன் இறைவேதம் என்ற சிறப்பை பெற்றிருப்பதனால்.

குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு இறைவனே பல இடங்களில் தெளிவாக விளக்கி கூறுகிறான். குர்ஆனில் 38 அத்தியாயத்தில் 41 தடவை குர்ஆனைப் பற்றி தெளிவாக எடுத்து கூறுகிறான் இறைவன்.

மக்கள் அறிவு எழுச்சி பெறாத காலத்திலேயே பல அறிய தகவல்களை எளிய முறையிலும், புரியும் வகையிலும் 1400 வருடங்களுக்கு முன்பாகவே எடுத்துரைத்திருகின்றன என்றால், குர்ஆன் இறைவேதம் தான் என்று சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ஆராய்ந்து பார்த்தாலே போதுமானது அதன் உன்மை நிலை புரியும். முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நபர்கள் குர்ஆனின் உன்மை நிலையை அறிவதற்காகவே. திருமறையாம் அல்குர்ஆன் பல மொழிகளில் வெளிவந்துள்ளது அனைத்து சகோதர மக்களும், அவரவர்களுக்கு ஏற்ற மொழியில் படித்து புரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த ஒரு வேதமும் அனைத்து மொழிகளிலும் இதுவரை வெளிவந்ததே இல்லை, ஆனால் குர்ஆன் அந்த சிறப்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

குர்ஆன் இறைவேதம் தான் என்பதை பல வகைகளில் தெளிவாக்களாம். அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகள் அன்றி வேறில்லை. எந்த ஒரு மனிதனாலும் அதை இவ்வளவு தெளிவாகவும், அனைத்து மத மக்களுக்கும் ஏற்ற வகையிலும் நயமாக யாருடைய மனதையும் புன்படுத்தாமல் தொகுக்க முடியாது, அதை தொகுக்க உலகைப்படைத்த இறைவனால் மட்டுமே முடியும் என்பதில் ஐயமில்லை.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் 23 ஆண்டுகாலமாக குர்ஆன் சிறிது சிறிதாக இறைவனால் அவர்களுக்கு அருளப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அதுமட்டுமல்லாது இறைவன் சில இடங்களில் நபியையே எச்சரிக்கை செய்திருக்கிறான். உதாரணத்திற்கு நபியே குர்ஆனை இயற்றிருந்தால் இது மாதிரியான எச்சரிக்கை அவசியமில்லாத ஒன்றாகிவிடுமே! பலரின் உள்ளங்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம் குர்ஆனை இயற்றியுள்ளார்கள் என்ற என்னமிருந்தால் அதை அடியோடு அழித்துவிட கீழே உள்ள குர்ஆன் வசனம் ஏதுவாக அமையும்.

இறைவனே தனது அருள்மறையில் பின்வருமாறு கூறுகிறான்.


இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலிள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. (10:37)


(நபியே!) "சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?" எனக் கேளும்; "அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) "இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே" என்று கூறிவிடும். (6:19)

குர்ஆனில் எந்த ஒரு இடத்திலேயும் முன்னுக்கு முரனாக திரித்து கூறவில்லை, அது எப்பொழுது அருளப்பெற்றதோ! அன்றுமுதல் இன்றுவரை மாறுதலுக்கு உட்படாமல் அப்படியே நிலைத்திருப்பதை வைத்தே குர்ஆன் இறைவேதம் தான் என்பது புலனாகிறது. குர்ஆன் எந்த ஒரு முரன்பாடுக்கும் உட்படவில்லை என்பதை இறைவனே திருமறையில் விளக்கி கூறி இருக்கிறான்.


அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)

நாம் எதை முன்னிருத்தி குர்ஆனில் தேடினாலும் அதற்கு ஏற்ற பதிலை நமக்கு தரக்கூடிய ஒரு பொக்கிஷமாக இறைமறை விளங்குகிறது. எந்த ஒரு காலத்திற்கும் ஏற்ற வகையில் இதில் புதைந்திருக்கும் தகவல்கள் ஏராளம், அதை அனுபவிக்கும் மனமிருந்தால் குர்ஆன் தகவல்களை வெளிபடுத்தும் தாராளம்.

குர்ஆன் எல்லாவற்றிலோடும் ஒத்து போகக்கூடிய ஒன்றாகும். 1400 வருடங்களுக்கு முன்னரே குர்ஆன் பல அறிவியல் உன்மைகளை இவ்வுலகிற்கு இலை மறைக்காய் போல எடுத்து கூறியிருக்கின்றது. அப்பொழுதே அது கூறியதை, விஞ்ஞானிகள் இப்பொழுதுதான் கண்டுபிடித்துவிட்டு என்னவோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி மார்தட்டிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு ...........

சமீப காலத்தில் விஞ்ஞானிகள் இரு கடல்களுக்கும் மத்தியில் தடுப்பு சுவர் இருப்பதாகவும், ஒரு கடல் நீர் மற்ற நீருடன் கலக்கவில்லை என்றும், ஒரு கடலின் நீர் இனிப்பாகவும், மற்றென்றின் நீன் உப்பாகவும் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் இறைவனோ அருள் மறையாம் திருகுர்ஆனில் 1400 வருடங்களுக்கு முன்னரே இச்செய்தியை விளக்கியுள்ளான்.

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)

இது போல பல அறிய கருத்துக்களை குர்ஆன் தன்னுள் தாங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாது உலகம் அழியும் வரை நடக்கும் பல அறிய செய்திகளை முன்கூட்டியே முன்னறிவிப்பாக குர்ஆன் கூறியிருக்கிறது. இறைவன் அருளால் நம் உயிருக்கு அவகாசம் இருந்தால் அப்படிப்பட்ட அரிய செயல்களை கான நம்மால் முடியும்.

எவர் ஒருவர் (முஸ்லீமாக இருந்தாலும் சரி அல்லது முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் சரி) முழு மனதுடனும், ஓர்மையுடனும் குர்ஆனை அனுகினால் அவர்களுக்கு குர்ஆன் நல்வழியைக்காட்டி சிறப்பான வழியில் வாழ்வை செலுத்த வழிவகை செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. கீழே உள்ள இறைவசனம் இவற்றை தெளிவுப்படுத்துகிறது.

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (2:2)

Wednesday, November 3, 2010

ஏகத்துவம்

இறை நம்பிக்கை:

உலகில் பல நபர்கள் இறைவனை பல வடிவங்களாக வடித்து வைத்துள்ளனர் மண்ணுலகத்துகு ஒரு கடவுள், விண்ணுலகத்துகு ஒரு கடவுள், கல்வி, செல்வம், ஆக்க, அழிக்க, காக்க என்று கண்ணில் படகூடியதையெல்லாம் கடவுள் என வழிபடுகிறார்கள்.

சிலர் கடவுளே கிடையாது எல்லாம் இயற்கையின் மூலம் தற்செயலாகவே நடக்கின்றன என்கிறாரகள்.

இறைவனா? அவன் ஒருவன் தான், அவன் எத்தேவையும் அற்றவன், அவன் யாரையும் பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக இவ்வுலகிலும், மறுவுலகிலும் எதுவும் இல்லை என்கிறது ஒரு பிரிவு.

கடவுள் இருக்கிறானா? இல்லையா? முதலில் இதை தெளிவுப்படுத்துவோம். இவ்வுலகிற்கு ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரத்துகும் மேற்பட்ட இறைத்தூதர்கள் வந்துள்ளதாக வரலாறு கூறுகின்றன. அவர்கள் அனைவரும் இறைவன் ஒருவனே என்று மக்களுக்கு போதித்துள்ளனர், அவர்களில் யாரும் இறைவன் இல்லை என்று சொன்னதில்லை இதன் மூலம் கடவுள் இருக்கிறான் என்பது தெரியவருகிறது.

நாம் அனைவருக்கும் விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங்க் சந்திர மண்டலத்துக்கு சென்று வந்த செய்தி தெரியும், ஆனால் அவர் சந்திர மண்டலத்திலிருந்து இந்த பூமி பந்தைப் பார்த்து தன்னையும் அறியாமல் பரவசப்பட்டு "THE WORLD IS BEAUTIFUL THE ONE GOD" இந்த உலகம் ரொம்பவும் அழகானது இதன் அதிபதி ஒருவன் தான் என்று சொன்னது பலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம், ஆனால் உண்மை.

ஆக கோடிக்கணக்கான மக்கள், இலட்சக்கணக்கான இறைத்தூதர்கள், பல்லாயிரக்கணக்கான அறிஞ்ர் பெருமக்கள், பன்னூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் என உலகில் 95% இறைநம்பிக்கை உடையவர்களாகவே இருக்கின்றனர், வெரும் 5% மக்கள் மட்டுமே இறைவன் இல்லை என்று விதண்டாவாதம் பேசிக்கொண்டு அழைகின்றனர். கடவுள் இல்லை என வாதிடும் ஒரு பகுதியினர் எடுத்து வைக்கும் ஒரே ஒரு கேள்வி என்னவென்றால், கடவுளை கண் முன்னால் நிருத்துங்கள் நாங்கள ஏற்றுக்கொள்ளிறோம் என்கிறார்கள். (மூஸா நபியவர்களிடம் பனூ இஸ்ரவேலர்கள் வைத்த அதே பழய செய்திதான் இவர்கள் வைக்கும் செய்தி).

கடவுள் இல்லை என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் சரியானதா? அறிவுப்பூர்வமானதா? எல்லாவற்றையும் நம் புறக்கண்ணால் காண இயலுமா?

இறைவன்
அனைத்துலகையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே!. உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அல்லாஹ்வின் அறிவுக்கும் வல்லமைக்குமான சான்றுகளாக விளங்குகின்றன. மனிதனின் அக - புற அம்சங்கள், உயிரினங்கள், வித்துகள், புற்பூண்டுகள், நட்சத்திரங்கள் முதலிய அனைத்து அம்சங்களிலும் அல்லாஹ்வின் வல்லமையும் இருப்பும் ஊர்ஜிதமாகின்றன. பிரபஞ்ச சிருஷ்டிகளின் ஆழ அகலங்கள் பற்றி அதிகமாக சிந்தனை செய்வதன் மூலமாக இறைவனது மகிமை, சக்தி, அறிவு நுட்பம் முதலானவற்றை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

மனிதனது அறிவும் சிந்தனையும் அதிகரிக்கின்ற போது, அல்லாஹ்வினது அறிவு, நுட்பம் மற்றும் வல்லமை பற்றிய புதிய சான்றுகள் மனிதர்களுக்குக் கிடைக்கின்றன. சிந்தனை விருத்தியும் ஏற்படுகின்றது. இச்சிந்தனையே, மனிதர்கள் தினந்தோறும் அல்லாஹ்வை நேசிப்பதற்கு முக்கிய காரணமாக அமைவதுடன், அவனளவிலான நெருக்கத்திற்கு வழிவகுக்கும் சிறப்பம்சமாகவும் அமைகின்றது.

உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவியும் தேடுகின்றோம் என்ற இஸ்லாத்தின் முக்கிய மூல மந்திரத்தை பல தடவை தமது நாவினால் எடுத்துரைத்து, அதன் மீதான தமது நம்பிக்கையை பலப்படுத்திக் கொள்ள உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது

''முஃமின்களுக்கு பூமியில் அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளேயும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?| (51:20,21)

''நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்களின் விலாப்புறங்களின் மீது சாய்ந்த வண்ணமும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்கள் மற்றும் பூமியின் படைப்புகளைப் பற்றியும் சிந்தித்து, 'எங்கள் இரட்சகனே! நீ இவைகளை வீணாகப் படைத்து விடவில்லை எனவும் கூறுகின்றனர்.(3:190,191)

பண்புகள்:

அல்லாஹ், அனைத்து விதமான குறைபாடுகளை விட்டும் தூய்மையானவனாவான். அவன் பரிபூரணமானவன். உலகில் காணப்படும் எல்லாவிதமான சிறப்புகளும் பண்புகளும் அவனிடமிருந்தே உருவாகியிருக்கின்றன.

''அல்லாஹ் எத்தகையவனென்றால், அவனைத் தவிர, வணக்கத்திற்குரிய வேறு நாயன் இல்லை. அவன் தான் உண்மையான பேரரசன். பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், அபயமளிப்பவன், கண்காணிப்பவன், யாவரையும் மிகைத்தவன், அடக்கியாளுபவன், பெருமைக்குரியவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். அவன், அல்லாஹ், படைப்பவன். அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன். அவனே படைப்பினங்களின் உருவத்தை அமைப்பவன். அவனுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே யாவரையும் மிகைத்தோனும் தீர்க்கமான அறிவுடையோனுமாவான்.'(59: 23,24)

அல்லாஹ் சகல விடயங்களிலும் வரையறைக்கு உட்படாதவனாக இருக்கின்றான். அவனது அறிவு, சக்தி, வாழ்வு அனைத்துமே முடிவற்றவையாகும். இதன் காரணமாக இடம், காலம் போன்ற வரையறைகளுக்கு உட்படாத பண்புள்ளவனாக அல்லாஹ் இருக்கின்றான். ஏனெனில், இடம் காலம் எதுவாக இருப்பினும் அவற்றுக்கு வரையறை இருக்கின்றது. ஆனால், அல்லாஹ், எல்லா காலதேச வர்த்தமானங்களையும் கடந்தவனாகவும் அவற்றை மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.

''வானத்திலும் அவனே வணக்கத்திற்குரிய நாயன்;;;. பூமியிலும் அவனே வணக்கத்திற்குரிய நாயன். அவனே தீர்க்கமான அறிவுடையவன், யாவற்றையும் மிகைத்தவன்.(43:84)

''நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு பார்க்கின்றவன். (57:04)
''மேலும், நாம் உயிர் நரம்பை விட அவனுக்கு மிக சமீபமாக இருக்கின்றோம். (50:16)

''முதலாமவனும், கடைசியானவனும் அவனே! அந்தரங்கமானவனும், வெளிப்படையானவனும் அவனே! மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவன். (57:03)

குர்ஆனின் சில வசனங்களில், அவன் அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன். ''எல்லாம் வல்ல அல்லாஹ் அர்ஷின்'' மீது நிலைகொண்டான் முதலான கருத்துகள் பல இடங்களில் வெளிப்படுகின்றன. அரபு மொழியில் அர்ஷ் எனும் பதம் சிம்மாசனத்தைக் குறிக்கவும் பயன்படுகின்றது. ஆயினும், இவ்வசனங்கள் அல்லாஹ்வுக்கு ஒரு பிரத்தியேக இடத்தை அடையாளப் படுத்துவதாகவோ, ஒரு சிம்மாசனத்தை அவனுக்கான இருப்பிடமாக இனங்காட்டுவதாகவோ இல்லை. முழுப் பிரபஞ்சத்தின் மீதும் அதற்கு அப்பாற்பட்ட ஆத்மீக உலகங்கள் மீதும் வியாபித்திருக்கும் இறையாட்சியையே அவை குறிக்கின்றன. ஏனெனில், அல்லாஹ்வுக்கு இடம் உண்டென்று கூறும்போது, அவனும் வரையறைக்கு உட்பட்டவனாக மாறிவிடும் நிலை ஏற்படுகின்றது. இடம் எனும் வரையறைக்குள் குறுகி விடுவது படைப்பினங்களின் பண்பாகும். படைப்பாளனோ! படைப்பினங்களை ஒத்தவனாக இல்லை.
அதேவேளை, ''அவனைப் போன்று ஒன்றுமில்லை(42:11),அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை(112:4) போன்ற வசனங்கள், அல்லாஹ்வின் ஒப்புவமையற்ற உயர் நிலையை சுட்டுவனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வை கண்களால் காண முடியாது என்பது எமது நம்பிக்கையாகும். ஏனெனில், ஒரு பொருளை கண்களால் காண முடியுமாக இருப்பதென்பது, குறித்த பொருளுக்கு உருவம், இடம், நிறம், தோற்றம், திசை முதலான பண்புகளை அடையாளப்படுத்தும் சான்றாக அமைகின்றது. இவை சிருஷ்டிகளின் பண்புகளாகும்;. ஆனால் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் பண்புகளோ, அவனது படைப்புகளின் பண்புகளை விட்டும் முற்றிலும் வேறுபட்டனவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தனவுமாகும்.
பார்வைகள் அவனை அடையாது. அவனே பார்வைகளை அடைகின்றான். அவன் நுட்பமானவன். யாவற்றையும் நன்கறிந்தவன். (06:103)

பனூ இஸ்ராயீல்களில் சிலர் நபி மூஸாவிடம் வந்து, ''மூஸாவே! நாம் இறைவனைக் கண்ணால் காண்கின்ற வரை, உம்மை விசுவாசங் கொள்ள மாட்டோம்(2:55) என்று தர்க்கம் புரிந்தார்கள். மூஸா நபியவர்கள் அக்குழுவினரை அழைத்துக் கொண்டு தூர்சீனா மலைக்குச் சென்று அவர்களது வேண்டுகோள் பற்றி அல்லாஹ்விடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்விடமிருந்து பதில் வந்தது. மூஸாவே! ஒரு போதும் நீர் என்னைப் பார்க்க முடியாது. எனினும் இம்மலையை நீர் பார்ப்பீராக, அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்.

அதன்படி அவர்களது இரட்சகன் அம்மலை மீது வெளிப்பட்ட போது, அம்மலை தூள்தூளாக்கி விட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பின்னர், அவர் தெளிவுபெற்று எழுந்த போது, அல்லாஹ்விடம் 'நீ மிகப் பரிசுத்தமானவன். நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன். இன்னும் நான் முஃமின்களில் முதன்மையானவன் என்றும் கூறினார். (07:143-9)

அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்ற இவ்வரலாற்று நிகழ்வு, மனிதர்கள் அல்லாஹ்வைக் காண்பதென்பது சாத்தியமற்றது என்பதற்கு சிறந்த சான்றாகும். சில அல்குர்ஆன் வசனங்களிலும், ஹதீஸ்களிலும் அல்லாஹ்வைக் காண முடியும் என்ற கருத்தை தொனிக்கும் கூற்றுகள் காணப்படினும், அவை அகக் கண்களால் அல்லாஹ்வை அடைய முடியும் என்பதையே சுட்டுவதாக அமைந்துள்ளன என்பது தெளிவு. ஏனெனில், குர்ஆன் வசனங்கள் எப்போதும் ஒன்றையொன்று முரண்பட்டு நிற்பதில்லை. மாறாக ஒன்றை மற்றொன்று விளக்குவதாகவே அமைகின்றது

தவ்ஹீத்:

தவ்ஹீத் எனும் ஏகத்துவம் பற்றிய அறிவு, அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் விடயத்தில் மிக முக்கியமான அம்சமாகும். தவ்ஹீத், மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்று எனக் கருதுவதை விட அதுவே அனைத்து மார்க்கக் கோட்பாடுகளினதும் மூல உயிராக இருக்கின்றது என்றால் மிகையாகாது.
இஸ்லாமிய அடிப்படைகளும் அதனையொட்டிய பிரிவுகளும் தவ்ஹீதிலிருந்து தான் தோற்றம் பெறுகின்றன. அல்லாஹ் ஒருவன், நபிமார்களின் அழைப்பு (தஃவா) ஒன்று, இறைமார்க்கம் ஒன்று, கிப்லா ஒன்று, இறைவேதம் ஒன்று, அனைத்து மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் ஒன்று, முஸ்லிம்களின் அணி ஒன்று, இறுதியில் மீளும்; மறுமை நாளும் ஒன்றே என இந்த ஒருமை எங்கும் விரவிக் காணப்படுகின்றது. இதனாலேயே, ஏகத்துவத்திலிருந்து ஷிர்க்கை நோக்கிச் செல்வதை மன்னிக்க முடியாத பாவமென இஸ்லாம் கருதுகின்றது.

''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ, அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார். (04:48)

''நீர் இணை வைத்தால், நிச்சயமாக உமது செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக, நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீரென உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வஹீ மூலம் அறிவிக்கப ;பட்டது. (39: 65)

ஏகத்துவத்தின் வகைகள்

இஸ்லாத்தில் நம்பிக்கையின் பிரகாரம், "ஏகத்துவம்" பல கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் சில

1.தவ்ஹீத் தாத்

இறைவன் தனித்தவன். அவனுக்கு இணையாகவோ, நிகராகவோ எதுவும் கிடையாத மூலவன் என்று நம்பிக்கை கொள்வது.

2.தவ்ஹீத் சிஃபாத் (பண்புகள்)

அறிவு, சக்தி, வல்லமை, நிரந்தரம் முதலிய பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வினது தாத் எனப்படும் மூலவியல்பில் உள்ளவையாகும். மேலும் அவனது பண்புகள் படைப்பினங் களின் பண்புகளைப்; போன்று காணப்படுவதில்லை. ஏனெனில், படைப்பினங்களுடைய பண்புகள் ஒவ்வொன்றும் அவற்றின் அடிப்படை மூலத்தில் இருந்து வேறுபட்ட இயல்பும் பல்லினத்; தன்மையும் கொண்டவையாகும். அல்லாஹ்வின் பண்புகள் அவனது தாத்தில் உள்ளவை என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்ந்த சிந்தனை தேவைப்படுகின்றது.

3.தவ்ஹீத் அஃப்ஆல் (செயல்கள்)

அல்லாஹ்வின் நாட்டத்திலிருந்தே உலகின் ஒவ்வொரு அசைவும், செயலும் உருவாகின்றது.

''அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன். அவனே ஒவ்வொரு பொருளின் மீது பொறுப்பாளன்.(39: 62)


''வானங்கள் மற்றும் பூமியினது (பொக்கிசங்களின்) சாவிகள் அவனுக்கே உரியவையாகும்.|(42: 12)


எனவே தான், ''அல்லாஹ்வைத் தவிர, பிரபஞ்ச வெளிப்பாடுகளில் தாக்கமேற்படுத்தும் எந்தவொரு காரணியும் கிடையாது||என்று கூறப்படுகின்றது. இதனை வைத்து, மனிதர்கள் தமது செயற்பாடுகளில் சுதந்திரமற்றவர்கள் என்று பொருள் கொள்ளப்படக் கூடாது. மாறாக, மனிதர்கள் தாமாகவே தீர்மானித்து செயற்படுவதில் சுதந்திரமானவர்களாக இருக்கின்றனர்.

''நிச்சயமாக, நாம் மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டியுள்ளோம். அதைப் பின்பற்றி அவன் ஒன்று- நன்றியுள்ளவனாக இருக்கலாம். அல்லது அதைப் பின்பற்றாது நன்றி மறந்தவனாக இருக்கலாம்.' (76: 03)

''மனிதனுக்கு அவனாகவே முயற்சி செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை.|(53: 39)


இவ்வசனங்கள் மனிதன் சுதந்திரமான நாட்டமுடையவன் என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், குறித்த செயலை செய்வதற்கான சக்தியையும் சுதந்திர நாட்டத்தையும் அல்லாஹ்வே மனிதர்களுக்கு வழங்குகின்றான். அந்த விதத்தில் மனிதர்கள் அல்லாஹ்வோடு தொடர்பு படுகின்ற போதிலும், மனிதர்களது செயல்கள் பற்றிய அவர்களது பொறுப்பு அதன் மூலம் குறைந்து விடுவதில்லை.

உண்மையில் மனிதர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அல்லாஹ் நாடியுள்ளான். அதன் மூலம், அவன் மனிதர்களைப் பரிசோதிக்கின்றான். அத்துடன் பரிபூரணத்துக்கும் இட்டுச் செல்கின்றான். ஏனெனில் தீர்மானிக்கும் சுதந்திரம் மற்றும் அல்லாஹ்வை அடிபணிவதற்கு சுயவிருப்பத்தின் படி முன்வருதல் என்பவற்றின் மூலமே மனிதர்களது பரிபூரணத் தன்மை ஊற்றெடுக்கின்றது. ஏனெனில், சுதந்திரமற்ற நிலையில் விதிக்கப்பட்ட செயல்கள், மனிதர்களுடைய நல்ல அல்லது கெட்ட பண்புகளை பிரதிபலிப்பனவாக இருக்க முடியாது.

இதே விடயங்களைத் தான் நபி (ஸல்) அவர்களுடைய அஹ்லுல் பைத்லிருந்து தோன்றிய பரிசுத்த இமாம்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள முடிகின்றது. அவர்களது கூற்றின் பிரகாரம்:

''முழுக்க விதியை நம்புவதோ, அல்லது பரிபூரண சுதந்திரமோ சரியானதன்று. உண்மை, அவ்விரண்டுக்கும் மத்திமமானதாகும்.

4.இபாதத் (வணக்க வழிபாடுகள்)

அல்லாஹ்வைத் தவிர மற்ற யாதொன்றுக்கும் வழிபடுவது என்பது கூடாது. இபாதத் எனப்படும் வணக்க வழிபாடு அல்லாஹ்வுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டியதாகும். இது, ஏகத்துவத்தின் அதி முக்கிய அம்சமாகும். உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.

''அவர்கள் இறைவனை மாத்திரமே வணங்க வேண்டும், அவனுக்காக மார்க்கத்தை தூய்மைப்படுத்த வேண்டும், இணை வைப்பதிலிருந்து ஏகத்துவத்தின் பால் திரும்ப வேண்டும், தொழுகைகையும் கடைப் பிடித்து ஸக்காத்தும் கொடுத்து வர வேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் ஏவப்பட வில்லை. இன்னும் இது தான் நேரான மார்க்கமாகும்.(98: 05)

நபிமார்கள் செய்யும் வழமைக்கு மாறான பிரமாண்டமான செயல்களனைத்தும் அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரமே இடம்பெறுகின்றன என்பதை செயல்கள் (அஃப்ஆல்) பற்றிய ஏகத்துவம் உறுதிப்படுத்துகின்றது. அல்குர்ஆன் நபி ஈஸா (அலை) பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றது:

எனது உத்தரவைக் கொண்டு வெண்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டத்தைச் சுகப்படுத்தியதையும் மரணித்தோரை எழுப்பியதையும் நினைவு கூர்வீராக. (05:110)

மேலும் நபி சுலைமான் (அலை) அவர்களுடைய அமைச்சர்களில் ஒருவரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

''வேதத்திலிருந்து அறிவை தன்னிடம் கொண்டிருந்தவரான ஒருவர், கண் இமைப்பதற்குள் அதனை நான் உம்மிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறினார். அது தன் முன் நிலைபெற்றிருப்பதை அவர் (சுலைமான்) கண்ட போது, இது எனது இரட்சகனின் பேரருளில் உள்ளதாகும் எனக் கூறினார். (27:40)

எனவே, குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தியதும் மரணித்தவர்களை உயிர்ப்பித்ததும் ஈஸா நபியவர்களுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டாலும் உண்மையில் அவை அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரமே நிகழ்ந்தவையாகும்.

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்