குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Friday, August 20, 2010

இறையச்சம்

எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

உலகில் பல மாதிரியான தவறுகள் நடந்தவன்னம் தான் இருக்கின்றது, அதை தடுப்பதற்கு பல சட்டங்கள் இருந்தும் அவற்றால் சரிவர செயல் பட முடியவில்லை என்பதே தெரிகிறது. இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? பலரிடம் இறையச்சம் இல்லாமையே காரணமாக இருக்கின்றது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், ஈவ்டீசிங், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனித உமை மீறல்கள் இது போன்ற குற்றங்களைத் தடுக்க வகைவகையான சட்டங்கள் இருந்தும் மனிதனைத் தவறிலிருந்து மீல வைக்க முடியவில்லை. அது ஒருகாலும் நம் சட்டத்தால் முடியாது.

அப்படியெனில் உலகில் மலிந்து கிடக்கின்ற குற்றங்களைக் களையெடுக்க, வேரோடு அழிக்க முடியவே முடியாதா? இத்தீமைகள் ஒவ்வொரு நாளும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? இதற்கு ஏற்ற தீர்வு தான் என்ன? என்ற கேள்வி நமக்குள் தோன்றலாம், இதை அழகாகவும் தெளிவாகவும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.

இஸ்லாம் கூறுகின்றது, எவ்வளவு கொடிய தவறாக இருந்தாலும் அதை எளிய முறையில் தடுக்க முடியும் மனித சட்டங்களால் அல்ல! நம் மனதில் மறைந்து கிடக்கும் இறையச்சத்தால் மட்டுமே!

இப்பொழுது நடக்கின்ற கொடுமைகளை விட, பல்லாண்டு காலமாக பல கொடுமைகளைச் செய்தவர்கள் தாம் அரபியர்கள். அவர்களுக்கு வட்டி, மது, மாது, சூது இவைகள் அனைத்தும் அத்துப்படி. அவர்களிடமிருந்து தான் இங்குள்ளவர்கள் இந்தத் தீமைகளைப் படித்திருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்களிடம் சில காலத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எது? இறையச்சம் தான்.

நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடக்கின்றது. அதைப் பார்த்த நபியவர்கள், ''இது ஸதகா தர்மப் பொருளாக இல்லாமலிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: (நூல்: புகாரி)

ஸதகா பொருள் நபியவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே தான் தெருவில் கிடந்த பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதைச் சாப்பிடாமல் விடுகின்றார்கள். காரணம் இது தடை செய்யப்பட்ட பொருளாக இருக்குமோ? இதனால் இறைவன் நம்மைத் தண்டித்து விடுவானோ? என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றார்கள்.

பொதுச் சொத்துக்களை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்று இன்று பல நபர்கள் தங்களின் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபியவர்கள் பொதுச் சொத்து தம்மிடம் இருந்து விடக் கூடாது; அது பொது மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தினார்கள்.

''நபி (ஸல்) அவர்களுடன் ஒரு நாள் அஸர் தொழுதேன். அவர்கள் தொழுகை முடிந்தவுடன் மிக வேகமாக மனைவியின் வீட்டுக்குச் சென்றார்கள். நபியவர்களின் விரைவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுற்றனர். மீண்டும் நபியவர்கள் பள்ளிக்கு வந்து மிக விரைவாகச் சென்றதன் காரணத்தை மக்களுக்குக் கூறினார்கள். ''என்னிடத்தில் (பொது மக்களுக்குச் சேர வேண்டிய) சில பேரீத்தம் பழங்கள் இருந்தன. அது என்னிடம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்காகத் தான் நான் சென்றேன்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

இப்படிப்பட்ட தூயவர்களிடத்தில் படித்த நபித்தோழர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் இறையச்சத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

நான் என் அடிமையை சாட்டையால் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்குப் பின்னாலிருந்து ''அபூ மஸ்வூதே!'' என்ற சப்தம் வந்தது. இருப்பினும் என் கோபத்தினால் அந்த சப்தத்தை நான் விளங்கவில்லை. என்னை அவர் நெருங்கி விடுகின்றார். நான் பார்த்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அப்பொழுது நபியவர்கள், ''அபூ மஸ்வூதே! தெந்து கொள்ளுங்கள்! அபூ மஸ்வூதே! தெந்து கொள்ளுங்கள்!'' என்றார்கள். என் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விடுகின்றது. மீண்டும் நபியவர்கள், ''இந்த அடிமையை அடிப்பதற்கு எந்த அளவுக்கு உம்மால் முடியுமோ அதை விட அல்லாஹ்வால் உம்மைத் தண்டிப்பதற்கு முடியும்'' என்று கூறினார்கள். இதற்குப் பிறகு ஒரு காலத்திலும் நான் என் அடிமையை அடிக்கவில்லை. (நூல்: முஸ்லிம்)

மனித நேயம் என்றால் என்ன என்று கூடத் தெரியாத மோசமான வாழ்க்கை வாழ்ந்த நபித்தோழர்களின் அடிப்படை குணத்தையே மாற்றி விடுகின்றது. அடிமைகளை, விலங்குகளை விட மட்டமாக நடத்தியவர்களை அவர்களும் மனிதர்கள் தாம்; அவர்களுக்கு ஒரு சிறு தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று செயல்பட வைத்தது இந்த இறையச்சம் தான்.

எல்லா தீமைகளுக்கும் முன்னோடிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கொஞ்ச காலத்திலேயே இறைவனால் பாராட்டப்பட்டனர் என்றால் அதற்குக் காரணம் இறையச்சம் தான். அது தான் மனித உருவில் மிருகங்களாக வாழ்ந்தவர்களை புனிதர்களாக மாற்றியது. இன்னும் அந்த அரபு நபித்தோழர்களின் பெயர்களை நாம் சொல்லும் போது நாமும் சேர்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கின்றோம்.

எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் எவ்வளவு பெரிய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன் நிராகத்து விடுவான் என்கின்றது இஸ்லாம்.

(குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)

''இறைவன் உங்கள் தோற்றத்தையோ உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

மேற்கூறிய செய்திகளைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் ஆணிவேர் இறையச்சம் தான் என்பது புரியும்.

இன்றைக்கு இறையச்சம் என்றால் முஸ்லிம்களுக்கு மத்தியில், மிகப் பெய தாடி இருக்க வேண்டும்; ஜுப்பா அணிந்திருக்க வேண்டும்; தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்; உலக ஆசைகள் எதுவுமே இல்லாமல் 24 மணி நேரமும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டும்; இப்படியெல்லாம் இருந்தால் அவர்கள் தான் இறையச்சத்தால் உயர்ந்தவர்கள்; இல்லையென்றால் அவர்களிடம் இறையச்சம் இல்லை என்ற நிலை உள்ளது.இஸ்லாம் இறையச்சத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை கூறவில்லை. மனைவி மக்களை விட்டு விட்டு வனவாசம் செல்வது தான் இறையச்சம் என நினைப்பது இஸ்லாத்திற்கு விரோதமானது என்று இஸ்லாம் கூறுகின்றது.

மூன்று நபர்கள் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களின் வீட்டிற்கு வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடு பற்றிக் கேட்டனர். அதற்கு நபியின் மனைவியார் நபியுடைய வணக்கத்தைப் பற்றி விவத்தார்கள். அப்பொழுது, ''முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கம் இப்படி இருந்தால் நாமெல்லாம் எங்கே!'' என்று வந்தவர்கள் வியந்தனர். எனவே அவர்களில் ஒருவர், ''நான் இனி இரவு முழுவதும் தொழுது கொண்டிருப்பேன்'' என்றார். மற்றவர், ''நான் காலமெல்லாம் நோன்பு நோற்பேன். நோன்பை விடவே மாட்டேன்'' என்றார். மூன்றாமவர், ''நான் பெண்களைத் தொட மாட்டேன். திருமணமே செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ''இப்படி இப்படியெல்லாம் சொன்னவர்கள் நீங்கள் தாமா?'' என்று வினவினார்கள். ''உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவன் நான் தான். நான் நோன்பு வைக்கிறேன். நோன்பு வைக்காமலும் இருக்கின்றேன். நான் இரவு நேரத்தில் தொழுகின்றேன். உறங்கவும் செய்கின்றேன். நான் பெண்களைத் திருமணம் செய்துள்ளேன். என் இந்த வழிமுறையை யார் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

நம்முடைய பார்வையில் இந்த மூன்று பேரும் தவறான முடிவு எதையும் எடுத்து விடவில்லை. ஏதோ தீமையை செய்யப் போகிறோம் என்று கூறவில்லை. ஆனால் அந்தத் தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டார்கள் என்றால் இறையச்சம் என்பதன் அளவுகோலை விளங்கலாம். இறையச்சம் என்பது அதிகமான நன்மை செய்வது அல்ல! 24 மணி நேரமும் வணக்கத்தில் ஈடுபாடு கொள்வது அல்ல! மனைவி மக்களைப் பிரிந்து, துறவறம் மேற்கொள்வது அல்ல! குடும்பத்துடன் இருந்து கொண்டு இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்வது தான் இறையச்சம் என்பதை இந்தச் செய்தி தெளிவாகத் தெவிக்கின்றது.

ரமளான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றோம். பகல் முழுவதும் உணவு எதையும் உட்கொள்ளாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் கழிக்கின்றோம். எல்லாம் எதற்காக? இங்கு தான் இஸ்லாம் மனிதனைப் பக்குவப்படுத்துகின்றது.

நோன்பு நோற்றிருக்கும் போது வீட்டில் உணவு சமைக்கப்பட்டிருக்கும். தனிமையில் இருக்கும் போது அதை உண்டு விட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. அவன் நினைத்தால் அந்த உணவைச் சாப்பிடலாம். ஆனால் அவன் சாப்பிடாமல் இருக்கின்றான். ஏன் தெயுமா? அவன் நோன்பு நோற்ற நிலையில் உணவு உட்கொண்டதை மனிதர்களில் யாருமே பார்க்கா விட்டாலும் தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் பார்த்துக்
கொண்டிருக்கின்றான். அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற இறையச்சம் தான் அந்த நோன்பாளியை சாப்பிட விடாமல் தடுக்கின்றது.

தனக்குச் சொந்தமான பொருளாக இருந்தாலும் அதை ரமளான் மாதத்தின் பகல் பொழுதில் உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டான்; அதைச் சாப்பிட்டால் அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற காரணத்தால் அதைச் சாப்பிடாமல் புறக்கணிக்கின்றான். நோன்பு நேரத்தில் தன்னுடைய பொருளையே இறையச்சத்தின் காரணமாக சாப்பிடாதவன் அடுத்தவர்களுடைய பொருளைச் சாப்பிட முன்வருவானா?

அடுத்தவர் பொருளை அநியாயமாக அபகரிக்க ஒருவன் நினைக்கும் போது, இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டால் அந்த அநியாயத்தை அவன் செய்ய மாட்டான். நோன்பு மட்டுமல்லாது இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கமுமே இறையச்சத்தை வளர்ப்பதற்கு உறுதுணையாக அமைந்துள்ளன.சுருக்கமாகக் கூறினால் இறையச்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று. அது இல்லையெனில் மனிதன் மனிதனாக வாழ முடியாது. மிருகக் குணம் கொண்டவனாக மாறி விடுவான் என்பது மறுக்க முடியாத உண்மை!

எனவே தீய செயல்களைக் களைந்து, நல்ல செயல்கள் புரிவதற்குத் தேவையான இறையச்சத்தை இறைவன் நமக்குத் தருவானாக!
Saturday, August 14, 2010

மரணம் முதல் மறுமை வரை

மரணம்:
உயிர்ப் பெற்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது உலக நியதி. ஒரு மனிதன் ஜனித்த நாள் முதல் ஒரு குறிபிட்ட நாள் வரைதான் அவனால் இப்பூமியில் உயிர் வாழ முடியும், அதன் பிறகு மரணமடைந்தே ஆக வேண்டும். அருள்மறை திருகுர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்கள் (செய்கைக)ளுக்குறிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (3:185)

மரணம் வரும் வேலையில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அல்லது தகர்க்க முடியாத கோட்டையில் இருந்தாலும் சரி, எந்த நேரததில், எந்த இடத்தில், எப்படி மரணம் அடைய வேண்டும் என்று இறைவன் வகுத்து வைத்துள்ளானோ! அதில் சிறிது கூட கூடவோ அல்லது குறையவோச் செய்யாது.இது இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்றே அன்றி வேறில்லை. இதையே நம்மை படைத்த இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களூக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ";இது உம்மிடமிருந்துதான் ஏற்பட்டது" என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: "எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே" (4:78) மேலும்,

இன்னும், ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடபீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48)

மக்களிடையே மரணத்தின் பயம் இல்லாமையால் உலகில் சண்டை சச்சரவு, குடும்பத் தகராறு, கொலை, திருட்டு, கற்பழிப்பு போன்ற செய்திகள் தினந்தோறும் செய்தித் தாள்களில் வந்தவண்ணம் உள்ளது, இதில் வருந்ததக்க செய்தி என்னவென்றால் சில நபர்கள் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு இந்த செயல்களில் ஈடுபடுவதே இதை நிவர்த்திச் செய்ய வழிவகை செய்யவேண்டும், அதற்கு அவர்களுக்கும், அனைத்து உலக மக்களுக்கும் மரணம், மண்ணறை, மறுமை இம்மூன்றையும் தெளிவுப் படுத்துவது இறையச்சமுளள் ஒவ்வொரு முஃமீனகள் மீதும் கடமையாக இருக்கிறது.

நாம் வாழும் இப்பூமியில் புதிது புதிதாக நோய்கள் உருவாகிக்கொண்டிருந்தாலும், நோயைப் படைத்த இறைவனே அதற்கான மருந்தையும் படைத்துள்ளான் என்ற நபிமொழிக்கேற்ப எந்த ஒரு நோயையும் முறியடிக்கும் வகையில் மருந்துகளை மனிதன் இறைவன் வழங்கிய அறிவைக்கொண்டு கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறான். எந்த ஒரு மனிதனாலும் மரணத்தை தடுத்து நிறுத்த மருந்து கண்டுப்பிடிக்க முடியாது.

பிறப்பு என்பது எதற்கெல்லாம் உண்டோ அவை இறப்பைத் தழுவியே ஆக வேண்டும். எவரும் அதிலிருந்து தப்ப இயலாது. இறைத்தூதர்களேயானாலும் இறந்துதான் தீரவேண்டும். அல்லாஹ் மரணத்திலிருந்து விதிவிலக்கு தருவதாக இருந்தால் முதலில் அதை பூமான் ந்பி (ஸல்) அவர்களுக்கு தந்திருக்க வேண்டும். ஆனால் இறைமறை அல்குர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கிறது.

நிச்சயமாக நீரும் மரணமடைவீர், அவர்களும் ஒருநாள் மரணமடைவார்கள் என்று நபிகளை முன்னிலைப்படுத்தியுள்ள அந்த வார்த்தையாடலிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட அந்த விதிவிலக்கு இல்லை என்றிருக்கும்போது வேறு யாருக்கு அந்த விதிவிலக்கு கிடைக்க முடியும்.

மரணம் எந்நிலையிலும், எப்பொழுது வேண்டுமானாலும், பணக்காரர், ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றில்லாமல் இறைவன் நாடியவர்களுக்கு அவன் குறிப்பிட்ட நேரத்தில் நம்மை வந்து அடையும், அதற்காக ஒவ்வொரு மனிதனும் தாயாராக இருக்க வேண்டும். மரணம் நம்மை தழுவும் பொழுது அதை சிறிது காலத்துக்கு தள்ளி வைக்க முடியாது அதற்காக இறைவனிடத்தில் எந்த ஒரு முறையீடும் செய்ய இயலாது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் செய்த நன்மை, தீமையின் அடிப்படையில் அவர் அவருக்கு தண்டனை வழங்கப்படும். இதை அருள்மறை திருகுர்ஆன் தெளிவாக விளக்குகிறது.

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்துக் கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல) வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். ஆனால், அல்லாஹ, எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (63:10,11)

மண்ணறை:
மனிதன் உலகில் வாழும் காலமெல்லாம் தன்னை மறந்து மண்ணறை வாழ்வை மறந்து, மனைவி, மக்கள், உறவினர்கள், நன்பர்கள் என ஒரு குழுவோடு வாழ்ந்து வருகிறான், அவன் மரணித்தவுடன் அவனை மண்ணறையில் வைக்கும் போது அவனுடன் யாரும் வருவதில்லை, பூமியில் எவ்வளவு சொகுசாக வாழ்ந்தாலும், மண்ணறையில் தனிமையிலும், எந்த ஒரு சொகுசும் இல்லாமல் தான் இருக்கவேண்டும்.

மண்ணறையில் தான் ஒருவன் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா என்று தீர்மாணிக்கப்படும். ஒருவன் இறந்து அடக்கம் செய்துவிட்ட பிறகு இரு மலக்குகள் அவனுடைய மண்ணறைக்கு வந்து அவன் இவ்வுலகில் எவ்வாறு நடந்துக்கொண்டான், நன்மை, தீமைகள் செய்ததுப்பற்றி அவனிடம் விசாரிப்பார்கள். விசாரனைக்கு பிறகு அவன் சுவர்க்க வாசியாக இருந்தால், சொர்க்கம் எடுத்துக்காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரக கொடுமைப்பற்றி எடுத்துக்காட்டப்படும். ஆக மறுமை நாள் வரை அவன் மண்ணறையிலேயே தான் குடியிருக்க வேண்டும்.

மண்ணால் படைக்கப்பட்ட மனிதன், மரணம் அவனை அடைந்தவுடன் அவன் மீண்டும் மண்ணுக்கே சொந்தகாரன் ஆகி விடுகிறான். அவன் மறுமை வரை அந்த மண்ணிலேயேதான் குடியிருகக வேண்டும். மாநபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், ஒவ்வொரு நாளும், நான் பயணிகளின் தங்குமிடம், நான் தனிமையின் இல்லம் எனது இல்லம் மண்ணாலானது, எனது இருப்பிடம் புழுபூச்சிகளின் தங்குமிடம் என மண்ணறை கூவுகிறது. மேலும், மண்ணறை மனிதனது நடத்தையைப் பொறுத்து சுவனப் பூங்காவாக அமையும் அல்லது நரகப்படுகுழியாக அமையும் எனவும் கூறியுள்ளார்கள். இதனால் தான் நரக வேதனைப் பற்றிச் செவியுறும் போது கூட அவ்வளவாக அலட்டிக்கொள்ளாத உதுமான் (ரளி) அவர்கள் மண்ணறைப் பற்றிக் கூறும் போது மட்டும் தாடி நனையுமளவு அழுது கண்ணீர் வடிப்பார்களாம். மண்ணறை மறுமையின் நுழை வாயில், இதில் வெற்றி பெறாதவன் மறுமை வரை சிரமப் ப்டுவான் என அதற்கான காரணத்தையும் விவரிப்பார்களாம்.

மறுமை:
இயல்பாகவே மனிதன் தவறு செய்யக்கூடியவானகவே இருக்கிறான், அதில் இறைவனால் பல தவறுகள் மன்னிக்கப்பட்டு தண்டனையிலிருந்து விலகி விடுகிறான். அதையும் மீறி கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வீனான பிரச்சனைகளை உண்டு பன்னுதல் போன்ற செயல்களில் வழமையாக ஈடுபட்டுக்கொண்டுள்ளான், அதில் அவன் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், உரிய தண்டனைப் பெறாமலேயே இவ்வுலகில் அவன் தப்பித்துக் கொள்கிறான். அதையும் மீறி அவனுக்கு தண்டனை வழங்கினால் பல தவறுகளுக்கும் சேர்த்து ஒரே தண்டனையிலிருந்து விடுபட்டு விடுகிறான். ஆனால் அது மாதிரி இறந்தப் பின் மறுமையில் அவன் அதை எதிர்பார்க்க முடியாது. ஒருவன் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறானோ! அதனடிப்படையில் அவனுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

மறுமை நாளில் ஒரு மனிதன் யாரையும் கண்டுக்கொள்ள மாட்டான். தாய், தந்தை,உற்வினர்கள்,நணபர்கள் யாராக இருந்தாலும் அவன் தன்னைப்பற்றியும் மறுமையின் சூழல் பற்றியும் சிந்தித்தவனாகவே இருப்பான் இதையே அருள் மறை திருகுர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கின்றது.

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும், அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். (80:34 - 37)

நாம் இவ்வுலகில் யாருக்கும் கட்டுப்படாமல் அடாவடிதனமாக வாழலாம். யாருக்கு தெரியப்போகுது என்று நம் எண்ணப்படி இஷ்டத்துக்கு கணக்கு வழக்கு இல்லாமல் செயல் பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அது போல மறுமையில் நடக்க முடியாது, ஏனென்றால் இறைவன் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு நம்முடைய உறுப்புகள் பதில் சொல்லும், அது நாம் செய்த தவறுகளுக்கு அது சாட்சி சொல்லும் அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதையே திருமறை அழகாக கூறுகின்றது.

அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.

ஆகவே மூஃமின்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் இறைவழியில் ஈடுபட்டு மறுமையில் ஈடேற்றம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவனாக எனது சிறு உரையை முடித்துக்கொள்ளிறேன். இறைவன் ஹிதாயத் தருவானக ஆமீன்!

குறிப்பு: நம்மால் எல்லளவு உதவி செய்யமுடியாவிட்டாலும், உபத்திரம் செய்யாமல் இருப்பதே நண்று,இதுவே இறைவனிடத்தில் நமக்கு ஈடேற்றம் பெற்று தரும்.
Wednesday, August 4, 2010

ஆதம் (அலை) வரலாறு

வரலாறு முன்னுரை:
நபி ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை களிமண்ணிலிருந்துப் படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு தன்னால் படைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை அவனே கற்றுக்கொடுத்தான். பின் அப்பெயர்களை மலக்குமார்களுக்கு விவரிக்குமாறு பணித்தான். பிறகு தன்னால் படைக்கப்பெற்ற மலக்குமார்கள் போன்றோர்களை நபி ஆதம் (அலை) அவர்களுக்கு சிறம் பணிய அல்லாஹ் கட்டளையிட்டான். இப்லீஸ் தவிர மற்ற ஏனையவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க சிறம் பணிந்தார்கள். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்ட ஆணவத்தால் களிமண்ணால் படைக்கப்பட்ட மனித வர்க்கத்திற்கு சிறம்பணிய மறுத்ததுடன் கியாமத் நாள் வரை அல்லாஹ்விடத்தில் அவகாசமும் வாங்கி வந்தான். இனி என் வேலை ஆதமுடைய மக்களை நேரான வழியில் செல்வதை தடுத்து அவர்களுக்கு முன்னும், பின்னும், இடமும், வலமும் சென்று அவர்களை நரகத்தின் பக்கம் இழுத்து வருவேன் என கூறினான்.

நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்தே அவர்களது துணைவியர், (ஹவ்வா (அலை)) அவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்தான். இதையே திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு பயந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்: பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் ( வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (4:1)

இப்லீஸ் கூறியவாறே ஆதம் (அலை) அவர்களை வழிக்கெடுக்க நினைத்து, இறைவன் ஆதம் (அலை) அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தும், இப்லீஸ், நீங்கள் இந்த கனியை உண்டால் நீங்கள் மலக்குகளாக ஆகிவிடுவீர்கள் அல்லது இந்த சுவனபகுதியிலேயே தங்கிவிடுவீர்கள் என இனியப் பேச்சில் மயங்கி இறைவன் தடுத்திருந்த மரத்தின் கனிகளை தின்றதினால் அவர்களுடைய வெட்கஸ்தலங்கள் வெளிப்பட்டன, அவர்கள் அங்கிருக்கும் இலைகளை எடுத்து மறைத்த வன்னம் இருந்தனர், அப்போது இறைவன் என் கட்டளையை மீறிச் சென்றதால் உங்களை இங்கிருந்து பூமிக்கு அனுப்புகிறேன் அங்கு சில காலம் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்து பிறகு என்னால எழுப்பப்படுவீர்கள் என கூறி அனுப்பினான்.

இவ்வுலகில் மனித வாழ்வின் துவக்கம் - வானவர்களின் உரையாடல்:
(நபியே!) இன்னும் உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதினிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள். அதற்கு இறைவன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். (2:30)

இன்னும் (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாள்ர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான் (2:31)

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன் விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள். (2:32)

"ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக" என்று (இறைவன்) சொன்னான் அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா! என்று (இறைவன்) கூறினான். (2:33)

மலக்குகள் - மனிதன் - வேறுபாடு:
இறைவன் கட்டளையை சிறிதும் மாற்றமில்லாமல் அப்படியே செய்யக்கூடியவர்க்ள் மலக்குமார்கள், ஆனால் மனிதன் போதிய அறிவு பெற்றமையால் தவறிழைக்கக் கூடியவன். எனவே மலக்குகள் அவ்வாறு கேட்டார்கள். மனிதன் தவறிழைத்தாலும் அத்தவறுக்காக செய்யும் பாவமீட்சியை இறைவன் விரும்புகிறான் என்பதை கீழ்காணும் நபிமொழி தெளிவாக உணர்த்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவனின் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் பாவம் செய்யவில்லையாயின், அல்லாஹ் உங்களை போக்கிவிட்டு, பாவம் செய்யும் வேறொரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹுதஆலாவிடம் பிழைப் பொறுப்பு இறைஞ்சுவார்கள். அவர்களுக்கு அவன் மன்னிப்பளிப்பான். (நூல் - முஸ்லீம் : அபூஹுரைரா (ரலி)).

இறைவன் ஆதமுக்கு கற்றுக்கொடுத்தான்:
இன்னும், (இறைவன்) எல்லாப் பொருட்களின் பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, கற்றுக்கொடுத்தவற்றை விவரிக்க சொன்னான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுதஆலா, ஆதம் (அலை) அவர்களைப் படைத்த பொழுது அவர்களுக்குக் கூறினான்: (ஆதமே!) நீர் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் மலக்குகளின் கூட்டத்தினருக்கு ஸலாம் கூறுவிராக! (அதற்குப் பதிலாக) அவர்கள் உமக்கு வழங்கும் காணிக்கையை செவிமடுப்பீராக! நிச்சயமாக அது உமக்கும், உம் சந்ததியினருக்கும் உரிய காணிக்கையாகும். அதன்படி ஆதம் (அலை), (அம்மலக்குகளின் கூட்டத்தினரிடம் சென்று) "அஸ்ஸலாமு அலைக்கும்", உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டவதாக என்று கூறினார்கள். அதற்கு அம்மலக்குகள், "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி" உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அவனின் கருணையும் உண்டாவதாக என்று கூறினார்கள், "வரஹ்மத்துல்லாஹி" என்ற சொல்லை ஸலாமின் மறுமொழியில் அவர்கள் அதிக்ப்படுத்தினார்கள். (நூல் - புகாரி, முஸ்லீம் : அபூஹுரைரா (ரலி))

ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுதந்த பாவமீட்சிக்கான பிரார்த்தனை:
அதற்கு அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்". என்று கூறினார்கள். (7:23)

ஆதம் (அலை) அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் பூமிக்கு இறக்கப்படுதல்:
(அதற்கு) இறைவன், "இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள் உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" (7:24)

"அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள் அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள் (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்". (7:25)

ஒரே வழித்தோன்றல்:
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவர்களிலிருந்தே அவர்களுடைய மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான் ஆகவே அல்லாஹுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான். (4:1)

களிமண்ணால் படைத்தான்:
இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம் (அலை) அவர்களை படைத்ததுப் பற்றி தெளிவாக கூறுகிறான்.
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (15:26)
(அதற்கு) முன்னர் ஜின்னை (ஜிங்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (15:28)

மலக்குகள் நூர் எனும் ஒளியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பின் ஜுவாலையால் படைக்கப்பட்டார்கள். ஆதம் (அலை) உங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பொருளால் (மண்ணால்) படைக்கப்பட்டார்கள். (முஸ்லீம்: ஆயிஷா (ரலி))

அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் வெள்ளையாகவும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பாகவும், சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும், சிலர் கடின சித்தமுடையோராகவும், சிலர் நடுநிலையிலும் உள்ளனர். (அஹ்மத் : ஆபூமூஸா (ரலி))

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நாள்:
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்தது, ஜும்ஆ நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைந்தார்கள், அன்றுதான் அவர்கள் செர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். (முஸ்லிம் : அபூஹுரைரா (ரலி))

ஆதமுடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்களே, அப்பாவத்தை உணர்ந்து இறைவனிடத்தில் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்தால் இறைவன் தன் பாவங்களை மன்னித்து நல்வாழ்வினைத் தருவான். நாம் அனைவரும் ஷைத்தானுடைய வலையில் விழுந்துவிடாமல் இறைவன் கட்டளைப்படி, எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழியில் சென்று ஈருலக நல்வாழ்வினைப் பெற்று, நல்லடியானாக மர்ணிப்பதற்கு கருணை உள்ள ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்