குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Tuesday, July 20, 2010

தொழுகை-விளக்கங்கள்

ஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும், மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான்!

தொழுகையினால் உடல் சுத்தம் மற்றும் மனச் சுத்தம் கிடைக்கிறது என்கிறது அல்குர்ஆன்.

"விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும், முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை நீரினால் தடவி, சுரண்டை உட்பட இரு கால்களையும் கழுவிச் சுத்தம் செய்யுங்கள்! (5:6)

தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” (2: 43).

ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்என்ற வசனத்தின் மூலம், கூட்டுத் தொழுகை கட்டாயமானது என்ற ஆதாரத்தை அதிகமான அறிஞர்கள் எடுக்கின்றனர். (தப்ஃஸீர் இப்னு கஸீர்).

போர் நிலையில் கூட ஜமாஅத்: -

‘(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்குத் தொழ வைக்க நீர் (இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும், அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்), அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப் பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக்குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர், ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களது ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது, எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்;லாஹ்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.” (4: 102).

தொழுகையாளிகளுக்கு கேடு: -

தொழுமையாளிகளுக்குக் கேடு தான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பாராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். (107: 4,5,6).

இவ்வசனம் தொழுகையாளிகள் மிக நிதானமாக கவனிக்க வேண்டிய ஒரு வசனமாகும், ஏனெனில் இவ்வசனத்தில் உள்ள எச்சரிக்கை தொழுகையாளிகளுக்குரியதாகும். கூட்டுத் தொழுகையை தவரவிடுவதும் தொழுகையில் ஏற்படும் மிகப்பெரும் அலட்ச்சியமாகும்.

மூன்று பேர் இருந்தால்: -

ஹதீஸ்:

மூன்று பேர் இருப்பார்களேயானால் அதில் ஒருவர் இமாமத் செய்யட்டும், அவர்களில் இமாமத் செய்வதற்கு மிகத்தகுதியானவர் அல்குர்ஆனை நன்றாக ஓதுபவரேஎன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரிய் (ரலி) அவர்கள், முஸ்லிம்).

இமாம் இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: நபியுடைய கட்டளை கூட்டுத் தொழுகை கடமை என்பதை குறித்து நிற்கின்றது.

பிரயாணத்திலும் கூட்டுத் தொழுகை கட்டாயம்: -

இருவர் நபியிடத்தில் ஒரு பிரயாணத்தை நாடியவர்களாக வந்தனர், நீங்கள் இருவரும் வெளியேறினால் (தொழுகை நேரம் வந்தவுடன்) பாங்கு சொல்லுங்கள், பின்னர் இகாமத் சொல்லுங்கள், பிறகு உங்களில் வயதில் பெரியவர் இமாமத் செய்யவும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: மாலிக் இப்னுல் {வைரிஸ் (ரலி). புஹாரி).

இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: இந்த ஹதீஸின் அடிப்படையில்: இருவர், இருவருக்கு அதிகமானவர்கள் ஜமாஅத்தாக கருதப்படுவர்.

பாங்குக்குப் பின் மஸ்ஜிதை விட்டு வெளியேறுவது தடை: -

முஅத்தின் பாங்கு சொன்னதன் பின் ஒருவர் மஸ்ஜிதை விட்டு வெளியேறினார், இந்த மனிதர் காஸிமின் தந்தை (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஷரீக் அறிவிக்கும் ஒரு செய்தியில்நீங்கள் மஸ்ஜிதில் இருக்கும் நிலையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டு விட்டால் தொழுகையை நிறைவேற்றும் வரை உங்களில் எவரும் வெளியேற வேண்டாம்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எமக்கு கட்டளையிட்டார்கள். (அஹ்மத்).

நாம் ஒரு முறை மஸ்ஜிதில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம், முஅத்தின் (தொழுகைக்காக) பாங்கு சொன்னார், அதன் பின் ஒரு மனிதர் மஸ்ஜிதை விட்டு வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் காஸிமின் தந்தை (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவராவார். (முஸ்லிம்).

சலுகை வழங்காமை: -

கண்கள் தெரியாத ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை மஸ்ஜிதுக்கு அழைத்துச் செல்வதற்கு ஒரு துணை இல்லை எனக்கு வீட்டில் தொழுவதற்கு சலுகை உள்ளதா? நபியவர்கள் அவர்களுக்கு சலுகை வழங்கினார்கள். அவர் திரும்பிச் சென்ற போது மறுபடியும் அழைத்து நீர் பாங்கோசையை கேட்கின்றீரா? அவர் ஆம் என்று கூற அப்படியானால் நீர் மஸ்ஜிதுக்கு சமூகமளிக்க வேண்டும்என கட்டளையிட்டார்கள். (முஸ்லிம்).

நயவஞ்சகனுக்கு சிரமமானதாகும்: -

பஃஜ்ர், இஷாவை விட நயவஞ்சகர்களுக்கு சிரமமான தொழுகை வேறொன்றுமில்லை. அவர்கள் அதன் (நன்மையை) அறிவார்களானால் தவழ்ந்த நிலையிலாவது (அதை நிறைவேற்றுவதற்கு) சமூகமளிப்பார்கள். முஅத்தினுக்கு தொழுகைக்கு இகாமத் சொல்வதற்கு ஏவி, மனிதர்களுக்கு தொழுகை நடத்த மற்றுமொருவருக்கு ஏவி, அதற்குப் பிறகும் மஸ்ஜிதுக்கு வராதவர்களை (வராதவர்களின் வீடுகளை) எரித்து விட (நான் விரும்புகிறேன்)” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஃஜ்ருடைய தொழுகையை எமக்கு தொழுவித்தார்கள். இன்ன மனிதர் வந்திருக்கின்றாரா இல்லை என்று சொன்னார்கள் ? இன்ன மனிதர் வந்திருக்கின்றாரா? இல்லை என்று சொன்னார்கள். நிச்சயமாக இந்த இரு தொழுகைகளும் நயவஞ்சகர்களுக்கு சிரமமானதாகும். அந்த இரு தொழுகையின் (சிறப்புகளை) அவர்கள் அறிவார்களானால் முழங்கால்களால் தவழ்ந்த நிலையிலாவது சமூகமளித்திருப்பார்கள். நிச்சயமாக (தொழுகையின்) முதல் வரிசையானது வானவர்களின் வரிசையைப் போன்றதாகும். அதன் சிறப்பை நீஙகள் அறிவீர்களானால் மிக வேகமாக அதன் பால் விரைவீர்கள். ஒருவர் மற்றொருவருடன் (கூட்டாக) தொழுவது தனியாகத் தொழுவதை விட சிறப்பானதாகும். இருவருடன் (கூட்டாகத்) தொழுவது, ஒருவருடன் (கூட்டாகத்) தொழுவதை விட சிறப்பானதாகும். இவ்வாறு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க (அது) அல்லாஹ்வின் விருப்த்திற்குரியதாக இருக்கும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (உபைய் இப்னு கஃப் (ரலி), அபூதாவுத்).

பகிரங்க முனாபிஃக் : -

ஐந்து நேரத் தொழுகைக்காக எங்கிருந்து அழைப்பு வருகின்றதோ (அதை அங்கு) பேணிப்பாதுகாத்து தொழுது வாருங்கள். நிச்சயமாக அது நேரிய சுன்னாக்களில் நின்றும் உள்ளவையாகும், அல்லாஹ், தனது தூதருக்கு மார்க்கமாக்கியது நேரிய சுன்னாதக்களைத் தான், வெளிப்படையான நயவஞ்சகனைத் தவிர வேறு எவரையும் ஜமாஅத்துக்கு வராமல் நாங்கள் பார்க்கவில்லை. நிச்சயமாக (இயலாதவைரக் கூட) இருவரின் துணை கொண்டு ஸப்ஃபில் தொழுகைக்காக அழைத்து வந்து நிறுத்தப்படுவதைப் பார்த்தோம். உங்களில் எவருக்கும் வீட்டில் மஸ்ஜித் இல்லை. நீங்கள் உங்கள் வீடுகளில் தொழுது மஸ்ஜித்களை விட்டு விடுவீர்களானால் நீங்கள் நபியுடைய வழி முறையை விட்டவர் ஆவீர்கள். நீங்கள் நபியுடைய சுன்னத்தை விட்டு விட்டீர்களானால் நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் கூறினார்கள். (அபூதாவுத்).

நாளை எவன் ஒரு (உண்மை) முஸ்லிமாக அல்லாஹ்வை சந்திக்க விரும்புகின்றானோஐந்து நேரத் தொழுகைக்காக எங்கிருந்து அழைப்பு வருகின்றதோ (அதை அங்கு) பேணிப்பாதுகாத்து தொழுது வரட்டும். நிச்சயமாக அது நேரிய சுன்னாக்களில் நின்றும் உள்ளவையாகும், அல்லாஹ், தனது தூதருக்கு மார்க்கமாக்கியது நேரிய சுன்னாக்களைத் தான். நீங்கள் இந்த (நயவஞ்சனைப் போன்று) வீட்டில் தொழுவீர்களானால், உங்கள் தூதரின் வழி முறையை விட்டவர்கள் ஆவீர்கள். உங்கள் தூதரின் வழி முறையை விட்டு விட்டால் நீங்கள் வழிதவறி விட்டீர்கள். உங்களில் எவர் அழகான முறையில் வுழுச் செய்து ஏதாவது ஒரு மஸ்ஜிதுக்கு செல்வாரானால் அவர் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும், அந்தஸ்து உயர்த்தப்படும், நன்மைகள் பதியப்படும். வெளிப்படையான நயவஞ்சகனைத் தவிர வேறு எவரையும் ஜமாஅத்துக்கு வராமல் நாங்கள் பார்க்கவில்லை. நிச்சயமாக (இயலாதவைரக் கூட) இருவரின் துணை கொண்டு ஸப்ஃபில் தொழுகைக்காக அழைத்து வந்து நிறுத்தப்படுவதைப் பார்த்தோம்என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

ஷைத்தானின் ஆதிக்கம்: -

எந்த ஒரு ஊரிலாவது, கிராமத்திலாவது, மூன்று பேர் இருந்து அங்கு ஜமாஅத்தாக தொழுகை நிலை நாட்டப் படவில்லையானால் ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி விடுகின்றான். உங்களுக்கு ஜமாஅத்தை நான் வலியுறுத்துகின்றேன். தனியாக இருக்கும் ஆட்டைத் தான் ஓநாய் பிடித்து சாப்பிடும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூதர்தா (ரலி), அபூதாவுத், நஸாயி).

கூட்டுத் தொழுகையின் சிறப்பு: -

இறையில்லத்துடன் எவருடைய உள்ளம் ஒன்றிப்போயிருந்ததோ அவருக்கு அர்ஷின் கீழ் நிழல் கிடைக்கும்:

எவரது உள்ளம் இறையில்லத்துடன் ஒன்றிப்போயிருக்கிறதோ அவருக்கு நாளை மறுமையில் அர்ஷின் கீழ் நிழல் கிடைக்கும்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் அளிக்கும் பொழுதுஉள்ளம் இறையில்லத்துடன் ஒன்றிப்போயிருப்பதென்பதுமஸ்ஜிதுடன் உள்ள இருக்கமான தொடர்பு, கூட்டுத்தொழுகையில் தவராது பங்கேற்றல் ஆகியவையாகும், இதுவல்லாது தொடர்ந்து பள்ளியில் தங்கியிருப்பது என்பது இதன் கருத்தல்ல.

இந்த ஹதீஸ் தொடர்பாக இமாம் அல்லாமா அயினி (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கும் பொழுது மஸ்ஜித் என்பது அல்லாஹ்வின் வீடாகும் அதை நோக்கி வருகை தருபவர்கள் அவனது விருந்தினராவர், அவன் எவ்வாறு தனது விருந்தாளிகளை கௌரவப்படுத்தாமல்
இருப்பான்?

அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான செயல்கள்: -

அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான செயல்கள் யாவை? எனக் கேட்டேன் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதாகும். பிறகு எது என கேட்டேன், பெற்றோருக்கு நன்மை செய்தலாகும் பிறகு எது எனக் கேட்டேன் இறை வழியில் போர் புரிவதாகும்எனக்கூறினார்கள். (புஹாரி).

கூட்டுத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு நடந்து செலவதன் சிறப்பு: -

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்: மஸ்ஜிதைச் சூழ காலியான நிலங்கள் இருந்து போது, பனு ஸலமா தனது வீட்டை மஸ்ஜிதுக்கு அன்மையில் அமைத்துக்கொள்ள விரும்பினார், நபி (ரலி) அவர்களுக்கு இச்செய்தி அறியக் கிடைத்த பொழுது, நீங்கள் உங்கள் வீடுகளை மஸ்ஜிதுக்கு அண்மையில் மாற்றுவதற்கு விரும்புகின்றீர்களா? ஆம் அல்லாஹ்வின் தூதரே! என பதிலளித்தனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் உங்களது வீடுகளும் நன்மைகளை பதிவு செய்கின்றன், உங்களது வீடுகளும் நன்மைகளை பதிவு செய்கின்றன என்று கூறினார்கள். (முஸ்லிம்).

கூட்டுத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு ஒருவர் நடந்து செல்வதன் மூலம் அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், அவரது அந்தஸ்தும் உயரும்: -

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களது பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய, அந்தஸ்துகள் உயரக்கூடிய ஒரு செயலை அறிவிக்கட்டுமா? அதற்கு நபித்தோழர்கள் அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே? எனக்கூறினர். சிரமமான நேரங்களில் நல்ல முறையில் வுழூச் செய்வது, மஸ்ஜிதுக்கு அதிக எட்டுக்களை வைத்து நடந்து செல்வது, ஒரு தொழுகைக்குப் பின் மற்றொரு தொழுகையை எதிர்ப் பார்த்து அமர்ந்திருப்பதுஇது உறுதி மிக்கதாகும்என நபிபள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒருவர் தொழுகைக்காக பரிபூரணமாக வுழுச் செய்து, பிறகு கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக நடந்து சென்று, மக்களுடன் கூட்டாக மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றுவாரானால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவிப்பதாவது: ‘ஒருவர் மஸ்ஜிதை நோக்கி வைக்கக்கூடிய ஒவ்வொரு எட்டுக்கும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும். ஓவ்வொரு எட்டுக்கும் நன்மைகள் பதியப்படும். வரும் போதும் செல்லும் போதும் அவ்வாறே நடக்கிறதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகை தனியாக வீட்டிலோ வியாபார ஸ்தலத்திலோ நிறைவேற்றப்படும் தொழுகையை விட இருபத்தி ஐந்து மடங்கு உயர்ந்ததாகும். உங்களில் ஒருவர் அழகாக வுழூச் செய்து, தொழுகையை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு மஸ்ஜிதுக்குச் செல்லும் போது அவர்; வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவரது அந்தஸ்து உயர்வு பெறுகிறது, பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, இன்னும் வானவர்கள் அவர்; மஸ்ஜிதில் தொழுகையை எதிர்ப்பார்த்து அமர்ந்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ்வின் அருள்வேண்டி அவருக்காக பிரார்த்திக்கின்றனர். யா அல்லாஹ் அவருக்கு அருள் புரிவாயாக!” (என பிரார்த்திக்கின்றனர்) என நபிகளார் (ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

தொழுகையை நிறைவேற்றுவதற்காக வுழூச்செய்து வெளியேறியவருக்கு கிடைக்கும் கூலி இஹ்ராம் அணிந்து ஹஜ்{க்காக தயாராகி செல்பவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றதாகும்.

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஒருவர் தனது இல்லத்திலிருந்து வுழூச்செய்து பர்லான தொழுகைக்காக வெளியேறிச் செல்கிறார் அவருடைய கூலி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து வெளியேறிச் செல்பவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றதாகும்என நபிகளார் (ரலி) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், அஹ்மத்).

தொழுகைக்காக வெளியேறிச் செல்பவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார்: -

மூவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றனர்: அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்காக வெளியேறிச் சென்ற வீரர். அவர் மரணிக்கும் வரை அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார். (அவர் அதில் ஷஹீதகாகி விட்டால்) சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுவார். அல்லது (மகத்தான) நன்மையுடனும், கஃனீமத்துடனும் திரும்புவார். (இரண்டாமவர்) மஸ்ஜிதுக்குச் சென்றவர் இவரும் மரணிக்கும் வரை அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார் (இவர் இதே நிலையில்) மரணித்தால் சுவர்க்கம் நுழைவிக்கப்படுவார். அல்லது நன்மைகளுடனும், நற்பாக்கியங்களுடனும் திரும்புவார். (மூன்றாமவர்) தனது வீட்டுக்குள் ஸலாம் சொன்ன்வராக நுழைந்தவர். இவரும் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலிய் (ரலி), அபூதாவுத்).

பரிபூரண ஒலி: -

புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் இருளில் மஸ்ஜிதுக்கு நடந்து செல்பவருக்கு நாளை மறுமையில் பரிபூரண ஒலி கிடைக்கும் என நபி (ரலி) அவர்கள் நன்மாராயம் கூறினார்கள்”. (அபூதாவுத், திர்மிதி).

முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படல்: -

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இமாம்ஆமின்சொன்னால் நீங்களும்ஆமீன்சொல்லுங்கள், எவருடைய ஆமீனும் வானவர்களுடைய ஆமீனும் நேர்பட்டு விடுகின்றதோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

நரகத்தை விட்டு விடுதலை: -

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவர் நாற்பது நாட்கள் முதல் தக்பீருடன் அல்லாஹ்விற்காக தொழுது வருவாரோ அவருக்கு இரண்டு விடுதலைப் பத்திரங்கள்; எழுதப்படும். ஓன்று நரகத்தை விட்டு விடுதலை, மற்றது நயவஞ்சகத் தனத்தை விட்டு விடுதலைஎன நபிகளார் (ரலி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

இஷாவையும், பஜ்ரையும் ஜமாஅத்துடன் தொழுது வருவதன் சிறப்பு: -

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ அம்ரா அறிவிக்கிறார்: உஸ்மான் (ரலி) மஃரிப் தொழுகையின் பின் மஸ்ஜிதில் தனியாக அமர்ந்திருந்தார் நான் அவர் பக்கத்தில் அமர்ந்தேன். என் சகோதரனின் மகனே! நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். எவர் இஷாவுடையத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவாரோ அவர் பாதி இரவு நின்று வணங்கியவர் போன்றவராவார், எவர் {பஹ{டைய தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுவாரோ அவர் முலு இரவும் நின்று வணங்கியவர் போன்றவராவார் (முஸ்லிம்).

முதல் ஸப்ஃ:-

ஒரு கூட்டம் முதல் ஸப்ஃபை விட்டு தாமதித்தவர்களாகவே இருக்கின்றனர், எதுவரை எனில் அவர்களை அல்லாஹ் நரகிலும் பிற்படுத்தும் வரைஎன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), அபூதாவுத்.

ஒரு முறை நபியவர்கள் எம்மிடம் வந்து வானவர்கள் தனது ரப்பிடம் அணிவகுப்பது போன்று நீங்கள் அணிவகுக்க மாட்டீர்களா? என வினவினார். வானவர்கள் தனது ரப்பிடம் எவ்வாறு அணிவகுக்கின்றனர். அவர்கள் முதல் வரிசையை முழுமைப்படுத்திய பின்னர் இரண்டாவது வரிசையை ஆரம்பிப்பர்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி), நஸாயி.

நபிகளார் (ஸல்) அவர்கள் முதல் ஸப்பில் இருப்பவர்களுக்கு மூன்று முறை அருள் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கு ஒரு முறை அருள்வேண்டிப் பிரார்த்தித்தார்கள்என இர்பாலிப்னு ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (அஹ்மத்).

அபூ உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ் முதல் ஸப்பில் உள்ளவர்களுக்கு அருள் புரிகிறான், அவனது வானவர்களும் அவர்களுக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர், அப்பொழுது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கு எனக்கேட்டனர், நிச்சயமாக அல்லாஹ் முதல் ஸப்பில் உள்ளவர்களுக்கு அருள் புரிகிறான், அவனது வானவர்களும் அவர்களுக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர், அப்பொழுதும் நபித்தோழர்கள், இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கு எனக்கேட்டனர், ஆம் இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கும் தான், ஆம் இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கும் தான் எனக் கூறினார். (அஹ்மத்).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீங்கள், அல்லது அவர்கள் முதல் ஸப்பின் சிறப்பை அறிவீர்களானால் சீட்டுக் குலுக்கிப் பார்த்து அந்த சந்தர்ப்பை பெற்றுக் கொள்வீர்கள்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email:

2 comments:

Unknown said... at July 25, 2015 at 2:08 PM

jasakkallah

Unknown said... at July 25, 2015 at 2:10 PM

i got ogood information about thaqwa... may Allah helps you for your improvement

Post a Comment

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்