குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Saturday, August 14, 2010

மரணம் முதல் மறுமை வரை

மரணம்:
உயிர்ப் பெற்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது உலக நியதி. ஒரு மனிதன் ஜனித்த நாள் முதல் ஒரு குறிபிட்ட நாள் வரைதான் அவனால் இப்பூமியில் உயிர் வாழ முடியும், அதன் பிறகு மரணமடைந்தே ஆக வேண்டும். அருள்மறை திருகுர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்கள் (செய்கைக)ளுக்குறிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (3:185)

மரணம் வரும் வேலையில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அல்லது தகர்க்க முடியாத கோட்டையில் இருந்தாலும் சரி, எந்த நேரததில், எந்த இடத்தில், எப்படி மரணம் அடைய வேண்டும் என்று இறைவன் வகுத்து வைத்துள்ளானோ! அதில் சிறிது கூட கூடவோ அல்லது குறையவோச் செய்யாது.இது இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்றே அன்றி வேறில்லை. இதையே நம்மை படைத்த இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களூக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ";இது உம்மிடமிருந்துதான் ஏற்பட்டது" என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: "எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே" (4:78) மேலும்,

இன்னும், ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடபீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48)

மக்களிடையே மரணத்தின் பயம் இல்லாமையால் உலகில் சண்டை சச்சரவு, குடும்பத் தகராறு, கொலை, திருட்டு, கற்பழிப்பு போன்ற செய்திகள் தினந்தோறும் செய்தித் தாள்களில் வந்தவண்ணம் உள்ளது, இதில் வருந்ததக்க செய்தி என்னவென்றால் சில நபர்கள் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு இந்த செயல்களில் ஈடுபடுவதே இதை நிவர்த்திச் செய்ய வழிவகை செய்யவேண்டும், அதற்கு அவர்களுக்கும், அனைத்து உலக மக்களுக்கும் மரணம், மண்ணறை, மறுமை இம்மூன்றையும் தெளிவுப் படுத்துவது இறையச்சமுளள் ஒவ்வொரு முஃமீனகள் மீதும் கடமையாக இருக்கிறது.

நாம் வாழும் இப்பூமியில் புதிது புதிதாக நோய்கள் உருவாகிக்கொண்டிருந்தாலும், நோயைப் படைத்த இறைவனே அதற்கான மருந்தையும் படைத்துள்ளான் என்ற நபிமொழிக்கேற்ப எந்த ஒரு நோயையும் முறியடிக்கும் வகையில் மருந்துகளை மனிதன் இறைவன் வழங்கிய அறிவைக்கொண்டு கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறான். எந்த ஒரு மனிதனாலும் மரணத்தை தடுத்து நிறுத்த மருந்து கண்டுப்பிடிக்க முடியாது.

பிறப்பு என்பது எதற்கெல்லாம் உண்டோ அவை இறப்பைத் தழுவியே ஆக வேண்டும். எவரும் அதிலிருந்து தப்ப இயலாது. இறைத்தூதர்களேயானாலும் இறந்துதான் தீரவேண்டும். அல்லாஹ் மரணத்திலிருந்து விதிவிலக்கு தருவதாக இருந்தால் முதலில் அதை பூமான் ந்பி (ஸல்) அவர்களுக்கு தந்திருக்க வேண்டும். ஆனால் இறைமறை அல்குர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கிறது.

நிச்சயமாக நீரும் மரணமடைவீர், அவர்களும் ஒருநாள் மரணமடைவார்கள் என்று நபிகளை முன்னிலைப்படுத்தியுள்ள அந்த வார்த்தையாடலிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட அந்த விதிவிலக்கு இல்லை என்றிருக்கும்போது வேறு யாருக்கு அந்த விதிவிலக்கு கிடைக்க முடியும்.

மரணம் எந்நிலையிலும், எப்பொழுது வேண்டுமானாலும், பணக்காரர், ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றில்லாமல் இறைவன் நாடியவர்களுக்கு அவன் குறிப்பிட்ட நேரத்தில் நம்மை வந்து அடையும், அதற்காக ஒவ்வொரு மனிதனும் தாயாராக இருக்க வேண்டும். மரணம் நம்மை தழுவும் பொழுது அதை சிறிது காலத்துக்கு தள்ளி வைக்க முடியாது அதற்காக இறைவனிடத்தில் எந்த ஒரு முறையீடும் செய்ய இயலாது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் செய்த நன்மை, தீமையின் அடிப்படையில் அவர் அவருக்கு தண்டனை வழங்கப்படும். இதை அருள்மறை திருகுர்ஆன் தெளிவாக விளக்குகிறது.

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்துக் கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல) வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். ஆனால், அல்லாஹ, எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (63:10,11)

மண்ணறை:
மனிதன் உலகில் வாழும் காலமெல்லாம் தன்னை மறந்து மண்ணறை வாழ்வை மறந்து, மனைவி, மக்கள், உறவினர்கள், நன்பர்கள் என ஒரு குழுவோடு வாழ்ந்து வருகிறான், அவன் மரணித்தவுடன் அவனை மண்ணறையில் வைக்கும் போது அவனுடன் யாரும் வருவதில்லை, பூமியில் எவ்வளவு சொகுசாக வாழ்ந்தாலும், மண்ணறையில் தனிமையிலும், எந்த ஒரு சொகுசும் இல்லாமல் தான் இருக்கவேண்டும்.

மண்ணறையில் தான் ஒருவன் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா என்று தீர்மாணிக்கப்படும். ஒருவன் இறந்து அடக்கம் செய்துவிட்ட பிறகு இரு மலக்குகள் அவனுடைய மண்ணறைக்கு வந்து அவன் இவ்வுலகில் எவ்வாறு நடந்துக்கொண்டான், நன்மை, தீமைகள் செய்ததுப்பற்றி அவனிடம் விசாரிப்பார்கள். விசாரனைக்கு பிறகு அவன் சுவர்க்க வாசியாக இருந்தால், சொர்க்கம் எடுத்துக்காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரக கொடுமைப்பற்றி எடுத்துக்காட்டப்படும். ஆக மறுமை நாள் வரை அவன் மண்ணறையிலேயே தான் குடியிருக்க வேண்டும்.

மண்ணால் படைக்கப்பட்ட மனிதன், மரணம் அவனை அடைந்தவுடன் அவன் மீண்டும் மண்ணுக்கே சொந்தகாரன் ஆகி விடுகிறான். அவன் மறுமை வரை அந்த மண்ணிலேயேதான் குடியிருகக வேண்டும். மாநபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், ஒவ்வொரு நாளும், நான் பயணிகளின் தங்குமிடம், நான் தனிமையின் இல்லம் எனது இல்லம் மண்ணாலானது, எனது இருப்பிடம் புழுபூச்சிகளின் தங்குமிடம் என மண்ணறை கூவுகிறது. மேலும், மண்ணறை மனிதனது நடத்தையைப் பொறுத்து சுவனப் பூங்காவாக அமையும் அல்லது நரகப்படுகுழியாக அமையும் எனவும் கூறியுள்ளார்கள். இதனால் தான் நரக வேதனைப் பற்றிச் செவியுறும் போது கூட அவ்வளவாக அலட்டிக்கொள்ளாத உதுமான் (ரளி) அவர்கள் மண்ணறைப் பற்றிக் கூறும் போது மட்டும் தாடி நனையுமளவு அழுது கண்ணீர் வடிப்பார்களாம். மண்ணறை மறுமையின் நுழை வாயில், இதில் வெற்றி பெறாதவன் மறுமை வரை சிரமப் ப்டுவான் என அதற்கான காரணத்தையும் விவரிப்பார்களாம்.

மறுமை:
இயல்பாகவே மனிதன் தவறு செய்யக்கூடியவானகவே இருக்கிறான், அதில் இறைவனால் பல தவறுகள் மன்னிக்கப்பட்டு தண்டனையிலிருந்து விலகி விடுகிறான். அதையும் மீறி கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வீனான பிரச்சனைகளை உண்டு பன்னுதல் போன்ற செயல்களில் வழமையாக ஈடுபட்டுக்கொண்டுள்ளான், அதில் அவன் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், உரிய தண்டனைப் பெறாமலேயே இவ்வுலகில் அவன் தப்பித்துக் கொள்கிறான். அதையும் மீறி அவனுக்கு தண்டனை வழங்கினால் பல தவறுகளுக்கும் சேர்த்து ஒரே தண்டனையிலிருந்து விடுபட்டு விடுகிறான். ஆனால் அது மாதிரி இறந்தப் பின் மறுமையில் அவன் அதை எதிர்பார்க்க முடியாது. ஒருவன் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறானோ! அதனடிப்படையில் அவனுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

மறுமை நாளில் ஒரு மனிதன் யாரையும் கண்டுக்கொள்ள மாட்டான். தாய், தந்தை,உற்வினர்கள்,நணபர்கள் யாராக இருந்தாலும் அவன் தன்னைப்பற்றியும் மறுமையின் சூழல் பற்றியும் சிந்தித்தவனாகவே இருப்பான் இதையே அருள் மறை திருகுர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கின்றது.

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும், அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். (80:34 - 37)

நாம் இவ்வுலகில் யாருக்கும் கட்டுப்படாமல் அடாவடிதனமாக வாழலாம். யாருக்கு தெரியப்போகுது என்று நம் எண்ணப்படி இஷ்டத்துக்கு கணக்கு வழக்கு இல்லாமல் செயல் பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அது போல மறுமையில் நடக்க முடியாது, ஏனென்றால் இறைவன் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு நம்முடைய உறுப்புகள் பதில் சொல்லும், அது நாம் செய்த தவறுகளுக்கு அது சாட்சி சொல்லும் அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதையே திருமறை அழகாக கூறுகின்றது.

அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.

ஆகவே மூஃமின்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் இறைவழியில் ஈடுபட்டு மறுமையில் ஈடேற்றம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவனாக எனது சிறு உரையை முடித்துக்கொள்ளிறேன். இறைவன் ஹிதாயத் தருவானக ஆமீன்!

குறிப்பு: நம்மால் எல்லளவு உதவி செய்யமுடியாவிட்டாலும், உபத்திரம் செய்யாமல் இருப்பதே நண்று,இதுவே இறைவனிடத்தில் நமக்கு ஈடேற்றம் பெற்று தரும்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email:

0 comments:

Post a Comment

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்