குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Wednesday, November 3, 2010

ஏகத்துவம்

இறை நம்பிக்கை:

உலகில் பல நபர்கள் இறைவனை பல வடிவங்களாக வடித்து வைத்துள்ளனர் மண்ணுலகத்துகு ஒரு கடவுள், விண்ணுலகத்துகு ஒரு கடவுள், கல்வி, செல்வம், ஆக்க, அழிக்க, காக்க என்று கண்ணில் படகூடியதையெல்லாம் கடவுள் என வழிபடுகிறார்கள்.

சிலர் கடவுளே கிடையாது எல்லாம் இயற்கையின் மூலம் தற்செயலாகவே நடக்கின்றன என்கிறாரகள்.

இறைவனா? அவன் ஒருவன் தான், அவன் எத்தேவையும் அற்றவன், அவன் யாரையும் பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக இவ்வுலகிலும், மறுவுலகிலும் எதுவும் இல்லை என்கிறது ஒரு பிரிவு.

கடவுள் இருக்கிறானா? இல்லையா? முதலில் இதை தெளிவுப்படுத்துவோம். இவ்வுலகிற்கு ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரத்துகும் மேற்பட்ட இறைத்தூதர்கள் வந்துள்ளதாக வரலாறு கூறுகின்றன. அவர்கள் அனைவரும் இறைவன் ஒருவனே என்று மக்களுக்கு போதித்துள்ளனர், அவர்களில் யாரும் இறைவன் இல்லை என்று சொன்னதில்லை இதன் மூலம் கடவுள் இருக்கிறான் என்பது தெரியவருகிறது.

நாம் அனைவருக்கும் விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங்க் சந்திர மண்டலத்துக்கு சென்று வந்த செய்தி தெரியும், ஆனால் அவர் சந்திர மண்டலத்திலிருந்து இந்த பூமி பந்தைப் பார்த்து தன்னையும் அறியாமல் பரவசப்பட்டு "THE WORLD IS BEAUTIFUL THE ONE GOD" இந்த உலகம் ரொம்பவும் அழகானது இதன் அதிபதி ஒருவன் தான் என்று சொன்னது பலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம், ஆனால் உண்மை.

ஆக கோடிக்கணக்கான மக்கள், இலட்சக்கணக்கான இறைத்தூதர்கள், பல்லாயிரக்கணக்கான அறிஞ்ர் பெருமக்கள், பன்னூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் என உலகில் 95% இறைநம்பிக்கை உடையவர்களாகவே இருக்கின்றனர், வெரும் 5% மக்கள் மட்டுமே இறைவன் இல்லை என்று விதண்டாவாதம் பேசிக்கொண்டு அழைகின்றனர். கடவுள் இல்லை என வாதிடும் ஒரு பகுதியினர் எடுத்து வைக்கும் ஒரே ஒரு கேள்வி என்னவென்றால், கடவுளை கண் முன்னால் நிருத்துங்கள் நாங்கள ஏற்றுக்கொள்ளிறோம் என்கிறார்கள். (மூஸா நபியவர்களிடம் பனூ இஸ்ரவேலர்கள் வைத்த அதே பழய செய்திதான் இவர்கள் வைக்கும் செய்தி).

கடவுள் இல்லை என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் சரியானதா? அறிவுப்பூர்வமானதா? எல்லாவற்றையும் நம் புறக்கண்ணால் காண இயலுமா?

இறைவன்
அனைத்துலகையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே!. உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அல்லாஹ்வின் அறிவுக்கும் வல்லமைக்குமான சான்றுகளாக விளங்குகின்றன. மனிதனின் அக - புற அம்சங்கள், உயிரினங்கள், வித்துகள், புற்பூண்டுகள், நட்சத்திரங்கள் முதலிய அனைத்து அம்சங்களிலும் அல்லாஹ்வின் வல்லமையும் இருப்பும் ஊர்ஜிதமாகின்றன. பிரபஞ்ச சிருஷ்டிகளின் ஆழ அகலங்கள் பற்றி அதிகமாக சிந்தனை செய்வதன் மூலமாக இறைவனது மகிமை, சக்தி, அறிவு நுட்பம் முதலானவற்றை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

மனிதனது அறிவும் சிந்தனையும் அதிகரிக்கின்ற போது, அல்லாஹ்வினது அறிவு, நுட்பம் மற்றும் வல்லமை பற்றிய புதிய சான்றுகள் மனிதர்களுக்குக் கிடைக்கின்றன. சிந்தனை விருத்தியும் ஏற்படுகின்றது. இச்சிந்தனையே, மனிதர்கள் தினந்தோறும் அல்லாஹ்வை நேசிப்பதற்கு முக்கிய காரணமாக அமைவதுடன், அவனளவிலான நெருக்கத்திற்கு வழிவகுக்கும் சிறப்பம்சமாகவும் அமைகின்றது.

உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவியும் தேடுகின்றோம் என்ற இஸ்லாத்தின் முக்கிய மூல மந்திரத்தை பல தடவை தமது நாவினால் எடுத்துரைத்து, அதன் மீதான தமது நம்பிக்கையை பலப்படுத்திக் கொள்ள உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது

''முஃமின்களுக்கு பூமியில் அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளேயும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?| (51:20,21)

''நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்களின் விலாப்புறங்களின் மீது சாய்ந்த வண்ணமும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்கள் மற்றும் பூமியின் படைப்புகளைப் பற்றியும் சிந்தித்து, 'எங்கள் இரட்சகனே! நீ இவைகளை வீணாகப் படைத்து விடவில்லை எனவும் கூறுகின்றனர்.(3:190,191)

பண்புகள்:

அல்லாஹ், அனைத்து விதமான குறைபாடுகளை விட்டும் தூய்மையானவனாவான். அவன் பரிபூரணமானவன். உலகில் காணப்படும் எல்லாவிதமான சிறப்புகளும் பண்புகளும் அவனிடமிருந்தே உருவாகியிருக்கின்றன.

''அல்லாஹ் எத்தகையவனென்றால், அவனைத் தவிர, வணக்கத்திற்குரிய வேறு நாயன் இல்லை. அவன் தான் உண்மையான பேரரசன். பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், அபயமளிப்பவன், கண்காணிப்பவன், யாவரையும் மிகைத்தவன், அடக்கியாளுபவன், பெருமைக்குரியவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். அவன், அல்லாஹ், படைப்பவன். அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன். அவனே படைப்பினங்களின் உருவத்தை அமைப்பவன். அவனுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே யாவரையும் மிகைத்தோனும் தீர்க்கமான அறிவுடையோனுமாவான்.'(59: 23,24)

அல்லாஹ் சகல விடயங்களிலும் வரையறைக்கு உட்படாதவனாக இருக்கின்றான். அவனது அறிவு, சக்தி, வாழ்வு அனைத்துமே முடிவற்றவையாகும். இதன் காரணமாக இடம், காலம் போன்ற வரையறைகளுக்கு உட்படாத பண்புள்ளவனாக அல்லாஹ் இருக்கின்றான். ஏனெனில், இடம் காலம் எதுவாக இருப்பினும் அவற்றுக்கு வரையறை இருக்கின்றது. ஆனால், அல்லாஹ், எல்லா காலதேச வர்த்தமானங்களையும் கடந்தவனாகவும் அவற்றை மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.

''வானத்திலும் அவனே வணக்கத்திற்குரிய நாயன்;;;. பூமியிலும் அவனே வணக்கத்திற்குரிய நாயன். அவனே தீர்க்கமான அறிவுடையவன், யாவற்றையும் மிகைத்தவன்.(43:84)

''நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு பார்க்கின்றவன். (57:04)
''மேலும், நாம் உயிர் நரம்பை விட அவனுக்கு மிக சமீபமாக இருக்கின்றோம். (50:16)

''முதலாமவனும், கடைசியானவனும் அவனே! அந்தரங்கமானவனும், வெளிப்படையானவனும் அவனே! மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவன். (57:03)

குர்ஆனின் சில வசனங்களில், அவன் அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன். ''எல்லாம் வல்ல அல்லாஹ் அர்ஷின்'' மீது நிலைகொண்டான் முதலான கருத்துகள் பல இடங்களில் வெளிப்படுகின்றன. அரபு மொழியில் அர்ஷ் எனும் பதம் சிம்மாசனத்தைக் குறிக்கவும் பயன்படுகின்றது. ஆயினும், இவ்வசனங்கள் அல்லாஹ்வுக்கு ஒரு பிரத்தியேக இடத்தை அடையாளப் படுத்துவதாகவோ, ஒரு சிம்மாசனத்தை அவனுக்கான இருப்பிடமாக இனங்காட்டுவதாகவோ இல்லை. முழுப் பிரபஞ்சத்தின் மீதும் அதற்கு அப்பாற்பட்ட ஆத்மீக உலகங்கள் மீதும் வியாபித்திருக்கும் இறையாட்சியையே அவை குறிக்கின்றன. ஏனெனில், அல்லாஹ்வுக்கு இடம் உண்டென்று கூறும்போது, அவனும் வரையறைக்கு உட்பட்டவனாக மாறிவிடும் நிலை ஏற்படுகின்றது. இடம் எனும் வரையறைக்குள் குறுகி விடுவது படைப்பினங்களின் பண்பாகும். படைப்பாளனோ! படைப்பினங்களை ஒத்தவனாக இல்லை.
அதேவேளை, ''அவனைப் போன்று ஒன்றுமில்லை(42:11),அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை(112:4) போன்ற வசனங்கள், அல்லாஹ்வின் ஒப்புவமையற்ற உயர் நிலையை சுட்டுவனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வை கண்களால் காண முடியாது என்பது எமது நம்பிக்கையாகும். ஏனெனில், ஒரு பொருளை கண்களால் காண முடியுமாக இருப்பதென்பது, குறித்த பொருளுக்கு உருவம், இடம், நிறம், தோற்றம், திசை முதலான பண்புகளை அடையாளப்படுத்தும் சான்றாக அமைகின்றது. இவை சிருஷ்டிகளின் பண்புகளாகும்;. ஆனால் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் பண்புகளோ, அவனது படைப்புகளின் பண்புகளை விட்டும் முற்றிலும் வேறுபட்டனவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தனவுமாகும்.
பார்வைகள் அவனை அடையாது. அவனே பார்வைகளை அடைகின்றான். அவன் நுட்பமானவன். யாவற்றையும் நன்கறிந்தவன். (06:103)

பனூ இஸ்ராயீல்களில் சிலர் நபி மூஸாவிடம் வந்து, ''மூஸாவே! நாம் இறைவனைக் கண்ணால் காண்கின்ற வரை, உம்மை விசுவாசங் கொள்ள மாட்டோம்(2:55) என்று தர்க்கம் புரிந்தார்கள். மூஸா நபியவர்கள் அக்குழுவினரை அழைத்துக் கொண்டு தூர்சீனா மலைக்குச் சென்று அவர்களது வேண்டுகோள் பற்றி அல்லாஹ்விடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்விடமிருந்து பதில் வந்தது. மூஸாவே! ஒரு போதும் நீர் என்னைப் பார்க்க முடியாது. எனினும் இம்மலையை நீர் பார்ப்பீராக, அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்.

அதன்படி அவர்களது இரட்சகன் அம்மலை மீது வெளிப்பட்ட போது, அம்மலை தூள்தூளாக்கி விட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பின்னர், அவர் தெளிவுபெற்று எழுந்த போது, அல்லாஹ்விடம் 'நீ மிகப் பரிசுத்தமானவன். நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன். இன்னும் நான் முஃமின்களில் முதன்மையானவன் என்றும் கூறினார். (07:143-9)

அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்ற இவ்வரலாற்று நிகழ்வு, மனிதர்கள் அல்லாஹ்வைக் காண்பதென்பது சாத்தியமற்றது என்பதற்கு சிறந்த சான்றாகும். சில அல்குர்ஆன் வசனங்களிலும், ஹதீஸ்களிலும் அல்லாஹ்வைக் காண முடியும் என்ற கருத்தை தொனிக்கும் கூற்றுகள் காணப்படினும், அவை அகக் கண்களால் அல்லாஹ்வை அடைய முடியும் என்பதையே சுட்டுவதாக அமைந்துள்ளன என்பது தெளிவு. ஏனெனில், குர்ஆன் வசனங்கள் எப்போதும் ஒன்றையொன்று முரண்பட்டு நிற்பதில்லை. மாறாக ஒன்றை மற்றொன்று விளக்குவதாகவே அமைகின்றது

தவ்ஹீத்:

தவ்ஹீத் எனும் ஏகத்துவம் பற்றிய அறிவு, அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் விடயத்தில் மிக முக்கியமான அம்சமாகும். தவ்ஹீத், மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்று எனக் கருதுவதை விட அதுவே அனைத்து மார்க்கக் கோட்பாடுகளினதும் மூல உயிராக இருக்கின்றது என்றால் மிகையாகாது.
இஸ்லாமிய அடிப்படைகளும் அதனையொட்டிய பிரிவுகளும் தவ்ஹீதிலிருந்து தான் தோற்றம் பெறுகின்றன. அல்லாஹ் ஒருவன், நபிமார்களின் அழைப்பு (தஃவா) ஒன்று, இறைமார்க்கம் ஒன்று, கிப்லா ஒன்று, இறைவேதம் ஒன்று, அனைத்து மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் ஒன்று, முஸ்லிம்களின் அணி ஒன்று, இறுதியில் மீளும்; மறுமை நாளும் ஒன்றே என இந்த ஒருமை எங்கும் விரவிக் காணப்படுகின்றது. இதனாலேயே, ஏகத்துவத்திலிருந்து ஷிர்க்கை நோக்கிச் செல்வதை மன்னிக்க முடியாத பாவமென இஸ்லாம் கருதுகின்றது.

''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ, அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார். (04:48)

''நீர் இணை வைத்தால், நிச்சயமாக உமது செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக, நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீரென உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வஹீ மூலம் அறிவிக்கப ;பட்டது. (39: 65)

ஏகத்துவத்தின் வகைகள்

இஸ்லாத்தில் நம்பிக்கையின் பிரகாரம், "ஏகத்துவம்" பல கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் சில

1.தவ்ஹீத் தாத்

இறைவன் தனித்தவன். அவனுக்கு இணையாகவோ, நிகராகவோ எதுவும் கிடையாத மூலவன் என்று நம்பிக்கை கொள்வது.

2.தவ்ஹீத் சிஃபாத் (பண்புகள்)

அறிவு, சக்தி, வல்லமை, நிரந்தரம் முதலிய பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வினது தாத் எனப்படும் மூலவியல்பில் உள்ளவையாகும். மேலும் அவனது பண்புகள் படைப்பினங் களின் பண்புகளைப்; போன்று காணப்படுவதில்லை. ஏனெனில், படைப்பினங்களுடைய பண்புகள் ஒவ்வொன்றும் அவற்றின் அடிப்படை மூலத்தில் இருந்து வேறுபட்ட இயல்பும் பல்லினத்; தன்மையும் கொண்டவையாகும். அல்லாஹ்வின் பண்புகள் அவனது தாத்தில் உள்ளவை என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்ந்த சிந்தனை தேவைப்படுகின்றது.

3.தவ்ஹீத் அஃப்ஆல் (செயல்கள்)

அல்லாஹ்வின் நாட்டத்திலிருந்தே உலகின் ஒவ்வொரு அசைவும், செயலும் உருவாகின்றது.

''அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன். அவனே ஒவ்வொரு பொருளின் மீது பொறுப்பாளன்.(39: 62)


''வானங்கள் மற்றும் பூமியினது (பொக்கிசங்களின்) சாவிகள் அவனுக்கே உரியவையாகும்.|(42: 12)


எனவே தான், ''அல்லாஹ்வைத் தவிர, பிரபஞ்ச வெளிப்பாடுகளில் தாக்கமேற்படுத்தும் எந்தவொரு காரணியும் கிடையாது||என்று கூறப்படுகின்றது. இதனை வைத்து, மனிதர்கள் தமது செயற்பாடுகளில் சுதந்திரமற்றவர்கள் என்று பொருள் கொள்ளப்படக் கூடாது. மாறாக, மனிதர்கள் தாமாகவே தீர்மானித்து செயற்படுவதில் சுதந்திரமானவர்களாக இருக்கின்றனர்.

''நிச்சயமாக, நாம் மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டியுள்ளோம். அதைப் பின்பற்றி அவன் ஒன்று- நன்றியுள்ளவனாக இருக்கலாம். அல்லது அதைப் பின்பற்றாது நன்றி மறந்தவனாக இருக்கலாம்.' (76: 03)

''மனிதனுக்கு அவனாகவே முயற்சி செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை.|(53: 39)


இவ்வசனங்கள் மனிதன் சுதந்திரமான நாட்டமுடையவன் என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், குறித்த செயலை செய்வதற்கான சக்தியையும் சுதந்திர நாட்டத்தையும் அல்லாஹ்வே மனிதர்களுக்கு வழங்குகின்றான். அந்த விதத்தில் மனிதர்கள் அல்லாஹ்வோடு தொடர்பு படுகின்ற போதிலும், மனிதர்களது செயல்கள் பற்றிய அவர்களது பொறுப்பு அதன் மூலம் குறைந்து விடுவதில்லை.

உண்மையில் மனிதர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அல்லாஹ் நாடியுள்ளான். அதன் மூலம், அவன் மனிதர்களைப் பரிசோதிக்கின்றான். அத்துடன் பரிபூரணத்துக்கும் இட்டுச் செல்கின்றான். ஏனெனில் தீர்மானிக்கும் சுதந்திரம் மற்றும் அல்லாஹ்வை அடிபணிவதற்கு சுயவிருப்பத்தின் படி முன்வருதல் என்பவற்றின் மூலமே மனிதர்களது பரிபூரணத் தன்மை ஊற்றெடுக்கின்றது. ஏனெனில், சுதந்திரமற்ற நிலையில் விதிக்கப்பட்ட செயல்கள், மனிதர்களுடைய நல்ல அல்லது கெட்ட பண்புகளை பிரதிபலிப்பனவாக இருக்க முடியாது.

இதே விடயங்களைத் தான் நபி (ஸல்) அவர்களுடைய அஹ்லுல் பைத்லிருந்து தோன்றிய பரிசுத்த இமாம்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள முடிகின்றது. அவர்களது கூற்றின் பிரகாரம்:

''முழுக்க விதியை நம்புவதோ, அல்லது பரிபூரண சுதந்திரமோ சரியானதன்று. உண்மை, அவ்விரண்டுக்கும் மத்திமமானதாகும்.

4.இபாதத் (வணக்க வழிபாடுகள்)

அல்லாஹ்வைத் தவிர மற்ற யாதொன்றுக்கும் வழிபடுவது என்பது கூடாது. இபாதத் எனப்படும் வணக்க வழிபாடு அல்லாஹ்வுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டியதாகும். இது, ஏகத்துவத்தின் அதி முக்கிய அம்சமாகும். உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.

''அவர்கள் இறைவனை மாத்திரமே வணங்க வேண்டும், அவனுக்காக மார்க்கத்தை தூய்மைப்படுத்த வேண்டும், இணை வைப்பதிலிருந்து ஏகத்துவத்தின் பால் திரும்ப வேண்டும், தொழுகைகையும் கடைப் பிடித்து ஸக்காத்தும் கொடுத்து வர வேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் ஏவப்பட வில்லை. இன்னும் இது தான் நேரான மார்க்கமாகும்.(98: 05)

நபிமார்கள் செய்யும் வழமைக்கு மாறான பிரமாண்டமான செயல்களனைத்தும் அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரமே இடம்பெறுகின்றன என்பதை செயல்கள் (அஃப்ஆல்) பற்றிய ஏகத்துவம் உறுதிப்படுத்துகின்றது. அல்குர்ஆன் நபி ஈஸா (அலை) பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றது:

எனது உத்தரவைக் கொண்டு வெண்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டத்தைச் சுகப்படுத்தியதையும் மரணித்தோரை எழுப்பியதையும் நினைவு கூர்வீராக. (05:110)

மேலும் நபி சுலைமான் (அலை) அவர்களுடைய அமைச்சர்களில் ஒருவரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

''வேதத்திலிருந்து அறிவை தன்னிடம் கொண்டிருந்தவரான ஒருவர், கண் இமைப்பதற்குள் அதனை நான் உம்மிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறினார். அது தன் முன் நிலைபெற்றிருப்பதை அவர் (சுலைமான்) கண்ட போது, இது எனது இரட்சகனின் பேரருளில் உள்ளதாகும் எனக் கூறினார். (27:40)

எனவே, குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தியதும் மரணித்தவர்களை உயிர்ப்பித்ததும் ஈஸா நபியவர்களுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டாலும் உண்மையில் அவை அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரமே நிகழ்ந்தவையாகும்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email:

0 comments:

Post a Comment

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்